கோவாவில் 1,330 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்: இந்திய எரிசக்தி கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கோவா: கோவாவில் ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அத்துடன், இந்திய எரிசக்தி கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கின் கீழ் கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா தொடர்பான ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த அடிக்கல்நாட்டப்பட்டுள்ளது.இந்த திட்டங்கள் கோவாவின் வளர்ச்சிக்கு பெரிய உந்துதலை கொடுக்கும்.

மேலும், தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் நிரந்தர வளாகம், தேசிய நீர் விளையாட்டு, ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை வசதி வளாகம், 1,930 பணி நியமன கடிதங்கள் வழங்கியது கோவாவின் வளர்ச்சியை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும். இரட்டை என்ஜின் அரசு காரணமாக கோவா வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ.2 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்திய எரிசக்தி துறையை பொருத்தமட்டில் சர்வதேச வல்லுநர்கள் வியந்து பாராட்டுகளை தெரிவிக்கின்றனர். உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி எரிசக்தி தேவைக்கான சர்வதேச திசையையும் தீர்மானிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

எரிபொருள் நுகர்வில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. மேலும், எல்என்ஜி இறக்குமதி- சுத்திகரிப்பு மற்றும் ஆட்டோமொபைல் சந்தையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், 2045-ம் ஆண்டுக்குள் நாட்டின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காகும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதனை உணர்ந்து எரிசக்தி தேவையில் தன்னிறைவைப் பெற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. 2025-ம் ஆண்டுக்குள்பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால்கலக்க மத்திய அரசு இலக்குநிர்ணயித்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதனிடையே, ஓஎன்ஜிசி நிறுவனம் உலகளாவிய தரத்தில் உருவாக்கிய ஒருங்கிணைந்த கடல் உயிர்வாழ் பயிற்சி மையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த மையம் ஆண்டுக்கு 10,000-15,000 பேருக்கு பயிற்சிகளை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோசமான வானிலை சமயங்களில் கடல் பேரழிவுகளில் இருந்து பாதுகாப்பாக தப்பிக்கும்நடைமுறைகள் குறித்து உருவாகப்பட்ட பயிற்சிகள் இந்த மையத்தின் மூலம் வழங்கப்படும்.

எரிசக்தியில் தன்னிறைவு காண்பது பிரதமரின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. இந்த குறிக்கோளை அடையும் விதமாக எரிசக்தி கண்காட்சி கோவாவில் பிப்ரவரி 6-9 வரை நடத்தப்படுகிறது.

உலகளாவிய எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.