புதுடெல்லி: டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், “இனி தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு எங்கும் செல்லமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்படுவார் என பரவலாக பேசப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். இதனையடுத்து, ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணியின் முதல்வராக அவர் மீண்டும் பொறுப்பேற்றார்.
9வது முறையாக பிஹார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார், முதல்முறையாக டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று (பிப்.08) சந்தித்தார். நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அரசு வரும் 12-ம் தேதி பிஹார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பிரதமரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரையும் நிதிஷ் குமார் சந்தித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜக தலைவர் ஆகியோரை சந்தித்துப் பேசினேன். நாங்கள் 1995ஆம் ஆண்டு வாஜ்பாய் காலம் முதல் ஒன்றாக இருக்கிறோம். இரண்டு முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நான் வெளியேறிவிட்டேன். ஆனால் இனி எங்கும் செல்லமாட்டேன். பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ், பிஹார் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து வளர்ச்சியின் புதிய உச்சங்களை தொடும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து புதிய ஆட்சி அமைந்துள்ளது. பொதுமக்களே எஜமானர்கள், அவர்களுக்கு சேவை செய்வதே எங்கள் அடிப்படை நோக்கம். மத்தியிலும், மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், வளர்ச்சிப் பணிகள் வேகம் அடைந்து, பிஹார் மக்கள் முன்னேற்றம் அடைவார்கள்” என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதிஷ் தலைமையிலான என்டிஏ அரசாங்கம், பிஹாரில் சிறந்த ஆட்சி மற்றும் வளர்ச்சியை முன்னெடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
बिहार के मुख्यमंत्री श्री @NitishKumar जी से भेंट हुई।
मुझे विश्वास है कि प्रधानमंत्री श्री @narendramodi जी के मार्गदर्शन और नीतीश जी के नेतृत्व में NDA की सरकार बिहार में सुशासन और विकास को गति देगी। pic.twitter.com/rLC3hZ3bfm
— Amit Shah (@AmitShah) February 7, 2024