புதுடில்லி, ”ஜனநாயகம் குறித்து விவாதம் நடக்கும்போதெல்லாம் இவருடைய பெயர் நிச்சயம் நினைவுக்கு வரும்,” என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ராஜ்யசபா பதவிக்காலம் முடிவடையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 68 பேருக்கு நேற்று பிரிவுபசாரம் அளிக்கப்பட்டது.
ராஜ்யசபாவில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:
லோக்சபாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி, புதிய முகங்கள் அறிமுகமாவர். ஆனால், ராஜ்யசபாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய முகங்கள் வருகை தருவர்.
அதனால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரிவுபசார நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ஆனால், இது பிரிவுபசாரம் அல்ல. பதவி முடியும் உறுப்பினர்கள், தங்களுடைய நீண்ட, விலை மதிப்பில்லாத அனுபவத்தை புதியவர்களிடம் தருகின்றனர்.
அதனால், இந்த சபை, ஒரு தொடர்ச்சியான சபையாகும்.
நம் ஜனநாயகத்தை கட்டிக் காக்கும் வகையில், மிகச் சிறப்பான பங்களித்துள்ள ஒவ்வொருவரும் பாராட்டுக்கு உரியவர்கள்.
அவர்கள் தங்களுடன் பெரிய அனுபவத்தை மட்டும் எடுத்துச் செல்லவில்லை, சபைக்கு அதை விட சிறந்த அனுபவத்தை அளிக்கின்றனர்.
இந்த வகையில், ஆறு முறை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். உடல்நலம் சரியில்லாத நிலையிலும், சக்கர நாற்காலியில் வந்து, இங்கு ஓட்டளித்தவர்.
ஜனநாயகம் தொடர்பான விவாதம் நடக்கும்போதெல்லாம், அவருடைய பெயர் நிச்சயம் நினைவுக்கு வரும்.
அவர் இந்த சபைக்கும், நாட்டுக்கும் ஆற்றிய பணிகள் அபாரமானவை. சபையின் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து, அவர் அளித்த பங்களிப்பு அளப்பரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்