இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளிடையே நீரிழப்பு நிலைமைகள் மற்றும் தோல் ஒவ்வாமை நோய்கள் அதிகரித்துள்ளன என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல விசேட வைத்திய நிபுனர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்திற்கு நேற்று (13) கருத்து தெரிவிக்கும் போதே அவர்;; இதனைத் தெரிவித்தார்.
அதிக வெப்பநிலை காரணமாக, தலைவலி, தலைசுற்று, உடல்வலி, பசியின்மை, தூக்கமின்மை போன்றவை ஏற்படுவதாகவும், இந்த நாட்களில் தண்ணீர் அதிகம் குடிக்காமல வேலைகளில் ஈடுபடும்போது, குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கும் நீரிழப்பு நிலைமை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் ஓட்டப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்துகொள்வோர் அதிகமாக நீர் அருந்த வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையெனின் அவர்களுக்கு வெப்ப அதிர்ச்சி நிலை ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்நாட்களில் வியர்வை கொப்புளங்கள், அரிப்பு, தோலழற்சி போன்ற சரும பாதிப்புகள் என்பன அதிகரிக்க வாய்ப்பு இருப்பதனால், நீர்; மற்றும் இயற்கையான திரவ உணவுகளை அதிகம் அருந்துவது சிறந்தது என்றும் அவர் கூறினார்.
இந்த நாட்களில் அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பதனால் சிறுநீரின் நிறம் மாறலாம், சிறுநீரின் நிறம் மாறி இருப்பின், அதிகம் நீர் அருந்துவது சிறந்தது. தோல் ஒவ்வாமை நோய்கள் ஏற்படுவதைக் குறைக்க, குழந்தைகளின் மேனியை அடிக்கடி நீரினால் நனைப்பது சிறந்தது, காலையிலும் மாலையிலும் சுமார் 20 நிமிடம் தண்ணீரில் விளையாட விட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் நாடுகளில் பதிவாகியிருந்த தூசி அதிகரிப்பு மற்றும் சுற்றாடல் மாசடைதல் காரணமாக காற்றுடன் அசுத்தமான காற்று இலங்கையையும் பாதித்துள்ளதாக கூறிய வைத்திய நிபுணர்; தீபால் பெரேரா, குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் அதிகரிக்கும் நிலையொன்று இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், சிறுவயதில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும்;, குழந்தைகளுக்கு இயற்கையான திரவ உணவுகளை அதிகமாக வழங்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
இந்த வெப்ப நிலை இன்னும் 02 மாதங்களுக்கு தொடரலாம் என்பதால் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் குறைந்தது ஒரு மரத்தையாவது நட வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.