வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராவல்பிண்டி: நடந்து முடிந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில் தலைமை தேர்தல் ஆணையருக்கும், தலைமை நீதிபதிக்கும் தொடர்புள்ளதாக பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ராவல்பிண்டி தேர்தல் ஆணையர், தாமும் செய்த தவறுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு கடந்த 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடந்தது. இதில் பல்வேறு ஊழல் வழக்கில் சிறைதண்டனை பெற்ற முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தஹ்ரீக் இன்சாப் கட்சி தேர்தல் போட்டியிட தடை விதிக்கப்பட்டதால், அவரது ஆதரவளார்கள் சுயேட்சையாக களம் இறங்கி அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். இதனால் தேர்தல் முடிவுகள் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றமாக அமைந்தது.
இந்நிலையில் ராவல்பிண்டி நகர தேர்தல் ஆணையர் லியாகத் அலி சத்தா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பாகிஸ்தானையே அலற வைத்துவிட்டது.
அவர் அளித்த பேட்டி வருமாறு; நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தேர்தல் ஆணையம் நியாயமாக தேர்தல் நடத்த வாய்ப்பில்லை முறைகேடு செய்ய முயற்சிக்கிறது என நாடு முழுதும் சுற்று பயணம் செய்து போரட்டம் நடத்திய இம்ரான் கான் கூறியது முற்றிலும் உண்மை தான் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
அவர் சொன்னபடியே நடந்து முடிந்த தேர்தலில் முறைகேட்டில் தலைமை தேர்தல் ஆணையர், தலைமை நீதிபதி ஆகிய இருவரும் கூட்டு களவாணித்தனம் செய்துள்ளனர். அவர்களின் கீழ் நிலை ஊழியன் நான் என்பதால் நானும் தவறு செய்ய நேர்ந்தது. இதனால் இத்தேர்தலில் பெருபாலான இடங்களில் இம்ரான் கட்சி வெற்றி பெற வாய்ப்பிருந்தும் வெற்றி வாய்ப்பு பறி போனது. இதற்கு நான் பொறுப்பேற்று எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
தேர்தல் ஆணையம் மறுப்பு
அதேநேரம் இந்த குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தலைமைத் தேர்தல் ஆணையர் மீது ராவல்பிண்டி ஆணையர் சுமத்திய குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முழுமையாக நிராகரிக்கிறது. தேர்தல் முடிவுகளை மாற்ற எந்த அதிகாரியும் அறிவுறுத்தவில்லை. தேர்தல் நேர்மையான முறையில் தான் நடந்தது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement