சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம், ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரின் மகள் சரஸ்வதி (26). இவர், எம்.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறார். வழக்கம்போல இன்று (19.2.2024-ம் தேதி) காலை 6:30 மணியளவில் கல்லூரிக்குச் செல்ல சரஸ்வதி, தன்னுடைய தந்தை நாகராஜனுடன் பைக்கில் சென்றார். ஆலப்பாக்கம் மெயின் ரோடு பகுதியில் சென்றபோது சரஸ்வதி, செல்போனைப் பார்த்தப்படி பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது அந்தச் சாலையில் வேகமாக பைக்கில் வந்த மர்ம நபர்கள், சரஸ்வதி கையில் வைத்திருந்த செல்போனைப் பறித்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தால் நிலைதடுமாறிய சரஸ்வதியும், நாகராஜனும் பைக்கிலிருந்து கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவ்வழியாகச் சென்றவர்கள் நாராஜனையும் சரஸ்வதியையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவி சரஸ்வதி, மதுரவாயல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் செல்போன் கொள்ளையர்களை போலீஸார் தேடிவருகிறார்கள்.