கடற்கரையில் காதலனுடன் இருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! – நாகர்கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய வாலிபர் ஒருவர் பி.டெக் படித்து முடித்து விட்டு, வீட்டில் இருந்தபடி ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவரும் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு படித்துவரும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காதலர்கள் இருவரும் சந்திக்க விரும்பினர். அதன்படி இரவு நாகர்கோவிலை அடுத்த சொத்தவிளை கடற்கரைக்குச் சென்றுள்ளனர். இரவு தனியாக வெளியே சென்றால் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்படும் என தனது தம்பியை ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றுள்ளார் அந்த மாணவி. மாணவியின் காதலனும் ஸ்கூட்டரில் சொத்தவிளை கடற்கரைக்கு சென்றுள்ளார். இருவரும் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அந்த இடத்தில் மாணவியின் தம்பியை நிற்கச் சொல்லியுள்ளனர். பின்னர் மாணவியும், வாலிபரும் கடற்கரையில் கைகோத்தபடி சற்று தொலைவில் நடந்து சென்றனர்.

காதலனுடன் இருந்த பெண் பாலியல் வன்கொடுமை

நேரம் இரவு 10:30 மணியை கடந்த பின்னரும் காதலர்கள் கடற்கரையில் இருந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் அங்கு 2 வாலிபர்கள் சென்றுள்ளனர். அவர்கள் காதல் ஜோடியை பார்த்ததும் மெல்ல அருகில் சென்று காதலனிடம் பேச்சு கொடுத்துள்ளனர். மேலும், `அந்த பெண்ணுடன் நாங்கள் சந்தோசமாக இருக்க வேண்டும், எவ்வளவு பணம் வேண்டும்?’ எனவும் கேட்டுள்ளனர். அதற்கு நாங்கள் இருவரும் காதல் ஜோடி, என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த இரண்டு வாலிபர்களும் அதை காதில் போட்டுக்கொள்ளாமல், மாணவியிடம் சில்மிஷம் செய்யத் தொடங்கினர். எங்களை விட்டு விடுங்கள் என காதல் ஜோடி கெஞ்சியுள்ளது. ஆனால் வாலிபர்கள் அதனை பொருட்படுத்தவில்லை.

வாலிபர்களின் அத்துமீறல் தொடர்ந்ததால், உங்களுக்கு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் எனக் கூறிய காதலன், அந்த வாலிபர்களில் ஒருவருக்கு ஜிபே ஆப் மூலம் பத்தாயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். பணம் கிடைத்த பிறகும் வாலிபர்கள் அங்கிருந்து செல்லாமல், காதலனை தாக்கி விரட்டிவிட்டு இளம் பெண்ணை மறைவான பகுதிக்கு தூக்கிச் சென்றுபாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கிடையே காதலன் வேகமாக அருகில் உள்ள கிராமத்துக்கு ஓடிச்சென்று நிலைமையை கூறி, அங்கிருந்து சிலரை அழைத்து வந்தார். அதையடுத்து வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இளம்பெண் அலங்கோலமான நிலையில் கதறி அழுதுகொண்டிருந்தார்.

கைதானவர்கள்

இதுகுறித்து அந்த பெண்ணின் காதலன், சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த வாலிபர் பணம் அனுப்பிய ஜிபே எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தியதில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்கள் பள்ளம் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த லியோராஜ் (34), பள்ளம் லூர்துகாலனி பகுதியை சேர்ந்த சகாய சீமோலியன் (34) என தெரியவந்துள்ளது. அவர்கள்மீது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவுசெய்ததுடன், இருவரையும் கைதுசெய்தனர். சுற்றுலாத் தலமான சொத்தவிளை கடற்கரையில் இரவு நேரத்தில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது. எனவே அங்கு இரவு நேரத்தில் ரோந்து பணிக்கு போலீஸாரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.