The items seized from J. were handed over to Tamil Nadu on March 6 and 7 | ஜெ.,யிடம் பறிமுதல் செய்த பொருட்கள் மார்ச் 6, 7ல் தமிழகத்திடம் ஒப்படைப்பு – Jayalalitha

பெங்களூரு, ”தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த பொருட்களை, மார்ச் 6 மற்றும் 7ம் தேதி, தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்,” என கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.

மறைந்த, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, கர்நாடகாவில் பல ஆண்டுகள் நடந்தது.

பறிமுதல்

கடந்த, 2016ல் ஜெயலலிதா இறந்ததை அடுத்து, இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில், ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலத்தில் விடும்படி, பெங்களூரு சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி மோகன் விசாரித்து வருகிறார். இவ்வழக்கு ஜனவரி 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகாவுக்கு வழக்கு செலவாக, 5 கோடி ரூபாய் செலுத்த, தமிழக அரசுக்கு, நீதிபதி மோகன் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், ஜெயலலிதாவின் பொருட்களை கர்நாடகாவில் ஏலம் விடுவதற்கு பதிலாக, தமிழக அரசிடம் ஒப்படைக்க, சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி மோகன் பிறப்பித்த உத்தரவு:

பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை, மார்ச் 6 மற்றும் 7ம் தேதி தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பொருட்களை பெற்று கொள்வதற்கு, இரண்டு தமிழக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

அன்று தமிழக உள்துறை முதன்மை செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி., ஆஜராக வேண்டும்.

ஒத்திவைப்பு

பொருட்களை எடுத்துச் செல்வதற்கு, ஆறு வாகனங்கள் கொண்டு வர வேண்டும். பொருட்கள் பெற்று செல்வதை, பதிவு செய்ய வீடியோகிராபர், போட்டோகிராபர் அழைத்து வரப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

பின், ‘வழக்கு செலவாக கர்நாடகாவுக்கு 5 கோடி ரூபாயை, தமிழக அரசு செலுத்தவில்லை’ என கர்நாடக அரசு வழக்கறிஞர் கிரண் ஜவளி தெரிவித்தார். விசாரணை, மார்ச் 6க்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.