தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றிருக்கிறது.
சமீப நாள்களில் திரையரங்கத்திற்கு மக்கள் வரும் எண்ணிக்கை அதிகளவில் குறைந்திருக்கிறது எனத் திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து பேசி வந்தார்கள். சமீபத்தில் பாரதிராஜா தலைமையிலான நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சின்ன பட்ஜெட் திரைப்படங்களுக்கு டிக்கெட் விலையைக் குறைக்குமாறு திரையரங்க உரிமையாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தது.
மேலும், புதிய படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைக் காட்டிலும் ரீ-ரிலீஸ் படங்களுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வருகிறது எனத் திட்டமிட்டுப் பல திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்தார்கள். திரையரங்கிற்கு வரும் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை குறைவதற்கு புதிய படங்களின் விரைவான ஓ.டி.டி ரிலீஸ் தேதிதான் காரணம் எனவும் சொல்லப்பட்டது. இது போன்ற பல விஷயங்கள் குறித்து இன்றைய தினம் நடைபெற்ற பொதுக் குழுவில் பேசியிருக்கிறார்கள்.
திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் சில கோரிக்கைகளையும் முன் வைத்திருக்கின்றனர். “திரையரங்கத்தில் வெளியான நான்கு வாரங்களிலேயே ஓ.டி.டியில் திரைப்படங்கள் வெளியாகின்றன. இதனால் திரையரங்கத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. திரையரங்கத்தில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகே திரைப்படங்களை ஓ.டி.டி-யில் வெளியிட வேண்டும். 8 சதவிகித உள்ளூர் பொழுதுபோக்கு வரியை நீக்க வேண்டும். திரையரங்குகளில் கிரிக்கெட் போட்டிகளைக் காட்சிப்படுத்த அனுமதிக்க வேண்டும்” எனக் கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், “மக்கள், படத்தில் நடித்திருக்கும் நடிகர்களை வைத்துத்தான் திரையரங்கத்திற்கு வருகிறார்கள். இந்த மனநிலையில்தான் மக்கள் இப்போது இருக்கிறார்கள். வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்களில் புது முக நடிகர்களை அறிமுகப்படுத்துகிறார்கள். இதுமட்டுமின்றி அப்படியான படங்களில் கன்டென்ட்டும் வலிமையின்றி இருக்கிறது. மக்கள் இப்படியான கன்டென்ட்களைப் பார்ப்பதற்கு விருப்பம் காட்டுவதில்லை. நாங்களும் சின்ன பட்ஜெட் திரைப்படங்களைத் திரையிட்டுத்தான் வருகிறோம். ஆனால், மக்களின் தேவையைப் பார்த்து அதனை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
சமீபத்தில்கூட பாரதிராஜா தலைமையிலான நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சின்ன பட்ஜெட் திரைப்படங்களுக்கு டிக்கெட் கட்டணத்தைக் குறைப்பதற்கான கோரிக்கையை வைத்திருந்தது. படங்களின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்துப் பேசும்போது இதுகுறித்து பேசுவோம் எனவும் கூறியிருக்கிறோம். முன்பெல்லாம் ஓ.டி.டி பிசினஸ் வேறு வடிவிலிருந்தது. திரையரங்க ரிலீஸுக்கு முன்பே திரைப்படங்களை வாங்கினார்கள்.

ஆனால் இப்போது அதுமாதிரியான பிசினஸ் நிலைமை இல்லை. திரையரங்க ரிலீஸுக்குப் பிறகு, அதன் வரவேற்பைப் பார்த்து படங்களை வாங்கிக் கொள்கிறோம் எனக் கூறுகிறார்கள். சில படங்களுக்கு இவ்வளவு கோடி வசூல் அள்ளியிருக்கிறது எனக் கூறுவது மிகைப்படுத்துதல்தான். வசூல் அதிகமாக ஈட்டியிருக்கிறது எனக் கூறி வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். இதனை ஒரு விளம்பரமாகவும் கருதுகிறார்கள்.
திரையரங்கில் திரைப்படங்கள் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகு ஓ.டி.டி-யில் வெளியிட்டால் அதிகளவிலான மக்கள் திரையரங்கத்திற்கு வந்து திரைப்படங்களைக் கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றவரிடம், “திரையரங்கத்தில் ஒளிபரப்பப்படும் அனைத்தும் சென்சார் செய்யப்பட்டிருக்க வேண்டும். கிரிக்கெட் போட்டியை எப்படி சென்சார் செய்யாமல் திரையிடுவீர்கள்?” எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த திருப்பூர் சுப்ரமணியம், “கிரிக்கெட் போட்டிகளில் சென்சார் செய்வதற்கு எதுவுமில்லை. நாங்கள் கிரிக்கெட் போட்டியை மட்டும்தான் திரையிடக் கேட்கிறோம். அதில் வருகிற விளம்பரங்களைத் திரையிட மாட்டோம். அப்படி நாங்கள் ஒளிபரப்பும் விளம்பரங்கள் சென்சார் செய்யப்பட்டுதான் ஒளிபரப்பப்படும்.

இதற்கு முன்பு தமிழக அரசிடம் கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம். அதனை நிறைவேற்றியும் இருக்கிறார்கள். இப்போது அவர்கள் தேர்தல் வேலைகளில் இருப்பதால் சந்திக்க முடியவில்லை. தேர்தல் முடிந்த பிறகு எங்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் முன் வைப்போம்” எனக் கூறினார்.
திரையரங்க உரிமையாளர் சங்கம் வைத்த கோரிக்கைகள் குறித்து உங்களின் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்.