இந்தியாவில் எவ்வளவுதான் வேலை வாய்ப்புகள் இருந்தாலும், வெளிநாட்டு மோகம் மட்டும் யாரையும் விடாது. வெளிநாட்டு வேலை என்றால், அது என்ன வேலையாக இருந்தாலும் முதல் ஆளாகச் செல்கின்றனர். இப்போது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே சண்டை நடக்கிறது. இதனால் இஸ்ரேலுக்கு அதிகப்படியான ஆட்கள் வேலைக்குத் தேவை என்றவுடன், ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேல் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே போன்று ரஷ்யாவில் வேலை என்று சென்றவர்கள், இப்போது போர் நடக்கும் இடத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர். ரஷ்ய ராணுவத்தில் ஹெல்பர் மற்றும் செக்யூரிட்டி கார்டு வேலை என்றும், 2 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் கூறி, இந்தியாவிலிருந்து ஏராளமானோரை யூடியூப் சேனல் நடத்தும் பைஃசல் கான் என்பவர் ரஷ்யாவிற்கு வேலைக்கு அனுப்பிவைத்தார். யூடியூப் விளம்பரத்தை பார்த்து ஏராளமானோர் இந்த வேலைக்கு விண்ணப்பித்துச் சென்றனர்.

அவர்கள் ரஷ்யாவிற்குச் சென்ற பிறகு எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, போரில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுவதாக, அங்கிருந்து தப்பிவந்த குஜராத்தைச் சேர்ந்த ஷேக் முகமது தஹிர் (24) என்பவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “Baba Vlogs என்ற யூடியூப்பில் வந்த விளம்பரத்தில் ரஷ்யாவில் செக்யூரிட்டி வேலை இருப்பதை அறிந்து, அதற்கு விண்ணப்பித்தேன். சென்னையில் இருந்து மாஸ்கோ சென்றேன். அங்கிருந்து ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றனர். அங்கு அடுத்த நாள் ஒரு அக்ரிமென்ட் கொடுத்து, அதில் ஒரு ஆண்டு வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும்படி கேட்டுக்கொண்டனர். அது பிரான்ஸ் மொழியில் எழுதப்பட்டு இருந்தது.

என்னை அழைத்துச் சென்ற ஏஜென்ட் செக்யூரிட்டி வேலை என்றுதான் சொன்னார். ஆனால் இரண்டு நாள்கள் கழித்து என்னை ராணுவ முகாம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, ராணுவ பணியில் சேரும்படி கேட்டுக்கொண்டனர். 15 நாள்கள் ஆயுதங்களை எப்படி கையாளவேண்டும் என்பது குறித்து எனக்கு பயிற்சி கொடுத்தார்கள். பின்னர் என்னை எல்லைக்கு அழைத்துச் சென்று பதுங்கு குழியில் ஒரு மாதம் வைத்திருந்து, உக்ரைன் ராணுவத்துடன் சண்டையிடச் சொன்னார்கள். எனக்கு வெடிகுண்டுகளை கையாளவும் பயிற்சி கொடுத்தார்கள். தினமும் ஓர் வேளை மட்டுமே சாப்பாடு கொடுத்தார்கள். சம்பளமும் 2 லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்லிவிட்டு, வெறும் 50 ஆயிரம் மட்டுமே கொடுத்தனர்.
அதிகமான நேரங்களில் போரில் இறந்த வீரர்களின் உடலை புகைக்கும் வேலையிலும் என்னை ஈடுபடுத்தினர். என்னைப் போன்று இந்தியாவைச் சேர்ந்த பலர் ரஷ்யா எல்லையில் சிக்கியுள்ளனர். நான் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்தியர் ஒருவரின் துணையோடு அங்கிருந்து வந்துவிட்டேன். கடந்த சில நாள்களுக்கு முன்புவரை அங்கு இருக்கும் 10 பேருடன் போனில் தொடர்பில் இருந்தேன். ஆனால் இப்போது அவர்களது போன் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய அரசு உதவவேண்டும்” என்றார்.
இது போன்று ஐதராபாத்தைச் சேர்ந்த மொகமத் அஸ்பன் என்பவரும் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் யூடியூப் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, ரஷ்யாவில் வேலைக்குச் சென்று போர் நடக்கும் பகுதியில் சிக்கிக்கொண்டார்.
இது குறித்து மொகமத் மனைவி அஸ்மா கூறுகையில், “மாதம் 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாகச் சொன்னார்கள். அவர்களை ரஷ்யாவிற்கு அழைத்து சென்றவுடன் எந்த வித பயிற்சியும் கொடுக்காமல் நேரடியாக எல்லைக்கு அழைத்துச் சென்று போரில் ஈடுபடுத்தியுள்ளனர். எல்லைக்கு அழைத்துச் செல்லும் வரை என்ன வேலை என்பதைச் சொல்ல மறுத்துள்ளனர். எனது கணவரை போனில்கூட தொடர்பு கொள்ள அனுமதி மறுக்கின்றனர்.

கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் எனது கணவருடன் பேசினேன். அதன் பிறகு அவருடன் பேச முடியவில்லை” என்றார். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மத்திய அரசின் உதவியை நாடி இருக்கின்றனர்.
அவர்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிய பைஃசல் கான் இது குறித்து கூறுகையில், “ரஷ்யாவில் சிக்கிக்கொண்டவர்களை பத்திரமாக மீட்க ஒரு மாதத்திற்கும் மேல் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் போலீஸில் புகார் செய்யும்படி கூறிக்கொண்டிருக்கிறேன். இதன் மூலம் இந்தப் பிரச்னை வெளியுலகத்திற்கு வந்து மத்திய அரசு அவர்களை மீட்க உதவும் என்று நம்புகிறேன்” என்றார்.