அண்ணா, கருணாநிதி புதிய நினைவிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

சென்னை: அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம், கருணாநிதியின் புதிய நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 1969-ம் ஆண்டு பிப்.3-ம் நாள் மறைந்தபின் அவருக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அதனை மிகச்சிறந்த கட்டிடக்கலை வடிவமைப்புடன் 1969-ம் ஆண்டில் அமைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.

தமிழக வரலாற்றில் 19 ஆண்டு காலம் முதல்வராக வீற்றிருந்து, தமிழகத்தை வளப்படுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, இந்திய அரசியலில் எழுச்சியை ஏற்படுத்திய, கருணாநிதி 95-ம் வயதில் 2018-ம் ஆண்டுஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். அதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தின் ஆணை பெற்று அண்ணா நினைவிடம் அருகிலேயே நினைவிடம் அமைக்கப்பட்டது. அண்ணா, கருணாநிதி ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் அண்ணா நினைவிடம் – கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளேசென்றால் எதிரில் அமர்ந்து படிப்பதுபோன்ற தோற்றத்தில் அண்ணாசிலை, வலபுறம் இளங்கோவடிகள்,இடதுபுறம் கம்பர் சிலைகள்அமைந்துள்ளன. நினைவிடங்களின் முன்பகுதி இருபுறங்களிலும் புல் வெளிகள் அமைந்துள்ளன. இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியம் அமைந்துள்ளது.

கருணாநிதி சதுக்கம்: ‘எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது’ எனப் பொறிக்கப்பட்டுள்ள அண்ணா சதுக்கத்தைக் கடந்து சென்றால் அமர்ந்த நிலையில் கருணாநிதி எழுதும் வடிவிலான சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையைக் கடந்துசென்றால் கருணாநிதி சதுக்கத்தைக் காணலாம். சதுக்கத்தில், ‘ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’எனும் தொடர் கருணாநிதியின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி சதுக்கத்தின் முன்னே இருபுறமும், தமிழ் செம்மொழி என மத்திய அரசு ஏற்ற முடிவைத் தெரிவித்துப் பாராட்டி, கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2005-ம் ஆண்டு நவ.8-ம் தேதி எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. கருணாநிதி சதுக்கத்தின் கீழேநிலவறைப் பகுதியில், ‘கலைஞர்உலகம்’ எனும் பெயரில் ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதியின் புதிய நினைவிடம் ஆகியவற்றை 26-ம் தேதி (நாளை) மாலை 7 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.