உலகப் புகழ் பெற்ற சர்வதேச ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் 1946 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

2013ம் ஆண்டிலிருந்து ஒளிப்பதிவாளர்கள் சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பைக் கெளரவிக்கும் வகையில் ‘பியர் ஆசிங்யு (Pierre Angénieux)’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினைப் புகழ்பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர்களான பிலிப் ரூஸெலோட், வில்மோஸ் சிக்மண்ட், ரோஜர் டிக்கின்ஸ், பீட்டர் சுசிட்ஸ்கி, கிறிஸ்டோபர் டாய்ல், எட்வர்ட் லாச்மேன், புருனோ டெல்போனல் என உலக அளவில் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்கள் இவ்விருதினைப் பெற்றிருக்கின்றனர். இந்த வரிசையில் தற்போது சந்தோஷ் சிவன் இவ்விருதினைப் பெறுவதன் மூலம் இவ்விருதைப் பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் சிவன், இந்திய சினிமாவில் திரைப்படங்கள், ஆவணப்படங்களில் பணியாற்றி இந்தியாவின் பெருமை மிகுந்த ஒளிப்பதிவாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுவரை ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் 12 தேசிய விருதினையும், நான்கு கேரள அரசின் விருதையும், மூன்று தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றிருக்கிறார்.

குறிப்பாக ஒளிப்பதிவாளராக இவர் பணியாற்றிய ‘ரோஜா’, ‘தளபதி’, ‘உயிரே’, ‘துப்பாக்கி’ உள்ளிட்ட படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்தவை. பல திறமையான ஒளிப்பதிவாளர்களை உருவாக்கியவர். இப்படி சிறந்த ஒளிப்பதிவாளராக, இயக்குநராக வலம் வந்த சந்தோஷ் சிவனுக்கு இவ்விருது மூலம் இப்போது சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
வாழ்த்துகள் சந்தோஷ் சிவன்