கஜுராஹோ: 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று கொடுத்து மூன்றாவது முறையாக மோடி அரசு அமைய உறுதியேற்றுக்கொள்ளுங்கள் என்று பாஜக தொண்டர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பாஜக பூத் கமிட்டி ஊழியர்கள் மத்தியில் பேசிய அமித் ஷா, “காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான ஊழல்களில் ஈடுபட்டது. காங்கிரஸ் என்றால் ஊழல், ஊழல் என்றால் காங்கிரஸ். வரவிருக்கும் மக்களவை தேர்தலில், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும். இதன்மூலம், மோடியின் தலைமையில் பாரதத்தை வல்லரசாகவும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் மாற்ற வேண்டும்.
கோயிலை கட்டுவோம் என்று பாஜக கூறுகிறது . ஆனால் கட்டும் தேதியைகூட மக்களுக்கு பாஜக அறிவிக்காது என்று ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்து பேசியிருந்தார். ஆனால் இப்போது சொன்னபடி, மோடி அரசாங்கத்தின் கீழ் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது. பொதுமக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றுகிறது” இவ்வாறு கூறினார்.