சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தமிழகம் முழுவதும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக எம்.பி.கனிமொழி தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களிடம் கருத்துகளை கேட்டு வரும் நிலையில், இன்று (பிப்.26) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதில், காஞ்சிபுரம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு தொழில்முனைவோர்கள், விவசாய சங்கத்தினர், வழக்கறிஞர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை திமுக எம்.பி.கனிமொழி கேட்டறிந்தார்.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்பி உடன் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோவி செழியன், ஆவடி நாசர், சி.வி.எம்.பி.எழிலரசன் எழிலன் நாகநாதன், கோவிந்தராஜன்,சுந்தர், சந்திரன் சென்னை மாநகர மேயர் பிரியாராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.