Indian Premier Leaque: இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் பல அழிக்க முடியாத சாதனைகள் இடம் பெற்றுள்ளது. ஒரே ஐபிஎல் சீசனில் விராட் கோலியின் அடித்த 973 ரன்கள், 30 பந்துகளில் கிறிஸ் கெயில் அடித்த சதம் போன்றவை எப்போதும் இருக்க கூடிய சாதனைகள் ஆகும். எதிர்காலத்தில் யாரும் கிட்ட கூட நெருங்க முடியாத ஒன்றாக இவை உள்ளது. ஐபிஎல் 2024 போட்டி வரும் மார்ச் 22ம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாட உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்க முடியாத 5 முக்கியமான சாதனைகளை பற்றி பார்ப்போம்.
கிறிஸ் கெய்லின் 175 ரன்கள்
அனைவருக்கும் பிடித்த புகழ்பெற்ற மேற்கிந்திய தீவுகளின் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்துள்ளார். ஐபிஎல்லில் 2013ல் புனே வாரியர்ஸுக்கு எதிராக 66 பந்துகளில் 175 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது தற்போது வரை இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் முடிந்தும் இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. இந்த போட்டியில் கெயில் 13 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்சர்கள் அடித்துள்ளார். இந்த போட்டியை பார்த்து பலரும் கதிகலங்கி போயினர். அதே போட்டியில் கிறிஸ் கெயில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்
2016 ஆம் ஆண்டு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களான விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் அதிக ரன்களுக்கு பாட்னர்ஷிப் செய்துள்ளனர். குஜராத் லயன்ஸுக்கு எதிராக இரண்டாவது விக்கெட்டுக்கு 229 ரன்கள் குவித்துள்ளது இந்த ஜோடி. இந்த குறிப்பிடத்தக்க சாதனை தற்போது வரை யாராலும் முடியடிக்கப்படவில்லை.
ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்
இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் விராட் கோலி பல சாதனைகளை புரிந்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் விராட் கோலி, 16 இன்னிங்சில் விளையாடி 973 ரன்கள் குவித்தார். ஆர்சிபி அணிக்காக அந்த ஆண்டு 4 சதங்கள் மற்றும் 7 அரை சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல்லில் கேப்டனாக அதிக போட்டிகள்
மகேந்திர சிங் தோனி ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஐபிஎல் போட்டியில் இதுவரை 226 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த 16 வருடத்தில் 133 போட்டிகளில் கேப்டனாக வெற்றி பெற்றுள்ளார்.
அதிகமுறை ஐபிஎல் பிளேஆப் சென்றுள்ள அணி
இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் எம்எஸ் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் எண்ணற்ற சாதனைகளை புரிந்துள்ளது. சென்னை அணி விளையாடியுள்ள 14 ஐபிஎல் சீசன்களில் 12 முறை பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் 10 முறை இறுதி போட்டிகளில் விளையாடி உள்ளனர். 16 ஐபிஎல் சீசன்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை வெற்றி பெற்றுள்ளது. சென்னையை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் 10 முறை பிளேஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.