சென்னை: ‘நீங்கள் நலமா’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சில நிமிடங்களிலேயே நாங்கள் நலமாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அரசின் நலத்திட்டங்கள் குறித்து கேட்டறியும் ‘நீங்கள் நலமா’ என்கிற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும், “தமிழக மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம். மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு வந்து சேர்வதை உறுதி செய்வதற்காக இந்த “நீங்கள் நலமா” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன்.” என்று திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திட்டத்தின் தொடக்க நாளான இன்று ‘நீங்கள் நலமா’ திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளைக் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சில நிமிடங்களிலேயே நாங்கள் நலமாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ” ‘நீங்கள் நலமா’ என்று கேட்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே, நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு!. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு!. சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு!. விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு!. எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு!. இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!. நாங்க நலமா இல்லை ஸ்டாலின்” என்று பதிவிட்டு விமர்சித்துள்ளார்.
“நீங்கள் நலமா” என்று கேட்கும்
திரு. @mkstalin அவர்களே-நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு!
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு!சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு!
விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு!எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு… pic.twitter.com/nTKZWGTtrz
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 6, 2024