மகாராஷ்டிராவில் வரும் மக்களவைத் தேர்தலில் சிவசேனா(உத்தவ்) தலைமையில் ஒரு அணியும், பா.ஜ.க தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகிறது. தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்த பிறகு கட்சியின் சின்னம் அஜித் பவாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அஜித் பவார் தனது சொந்த ஊரான பாராமதியில் கட்சியின் நிறுவன தலைவர் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவுக்கு எதிராக தனது மனைவி சுனேந்திர பவாரை நிறுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இதையடுத்து சரத் பவார் தனது கட்சி நிர்வாகிகளை அழைத்து பாராமதி தொகுதி நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அஜித் பவாரும் பாராமதியின் வளர்ச்சிக்காக சிறந்த வேட்பாளரை நிறுத்தப்போவதாக பாராமதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார்.

அஜித் பவாரின் விருப்பப்படி, அவரின் மனைவி சுனேந்திரா பவார் பாராமதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை அக்கட்சியின் மாநில தலைவர் சுனில் தட்காரே குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “பாராமதியில் தேசியவாத காங்கிரஸ் சுனேந்திரா பவாரை நிறுத்த முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
இதன் மூலம் முதல் முறையாக பவார் குடும்பத்தில் இரண்டு பெண்கள் பாராமதியில் போட்டியிட இருக்கின்றனர். சுனேந்திர பவார் நேற்று நடந்த கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ”எனக்கு பாராமதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் சாமானிய மக்களின் பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன்.

சாமானிய மக்களின் முன்னேற்றத்திற்காக அவருடன்(அஜித் பவார்) சேர்ந்து பணியாற்றுவேன்” என்று குறிப்பிட்டார். இது குறித்து சுப்ரியா சுலே கூறுகையில்,” எதிர்க்கட்சி வேட்பாளருக்கு மரியாதை கொடுப்பேன். தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் எந்த பிரச்னையும் கிடையாது. அரசியல் ரீதியாகத்தான் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது. இதற்கு முன்பு எனது தொகுதியில் நான் வெற்றி பெற அவர்கள்(அஜித் பவார்) உதவி செய்து இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன்” என்றார்.
இரண்டு பெண்களும் ஒரே தொகுதியில் போட்டியிடுவதால் பவார் குடும்பத்தில் அஜித் பவார் மற்றும் சரத் பவார் இடையே பகைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கட்சியை இரண்டாக உடைத்த பிறகு சரத் பவாருடன் சமாதானமாக செல்ல அஜித் பவார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அஜித் பவாருடன் சமாதானமாக செல்ல சரத்பவார் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY