நாக்பூர்: மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, நாக்பூர் சிறையில் இருந்து இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டார்.
நாக்பூர் சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்காக குடும்ப உறுப்பினர்கள் சிறைக்கு வெளியே காத்திருந்தனர். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சிறையில் இருந்து வந்து செய்தியாளர்களிடம் பேசிய சாய்பாபா, “என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. என்னால் இப்போது பேச முடியாது. நான் முதலில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு பின்பே என்னால் பேச முடியும்” என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பேராசிரியர்: மாவோயிஸ்ட்களுடன் ஜி.என். சாய்பாபாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், கட்ச்ரோலி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்களை வன்முறைக்கு தூண்டியதாகவும் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சாய்பாபா குற்றவாளி என குற்றம் சாட்டிய கட்ச்ரோலி செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு அவர் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து சாய்பாபா தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த மும்பை உயர்நீதின்ற நீதிபதிகள் வினய் ஜோஷி மற்றும் வால்மீகி எஸ்.ஏ.மெனேசஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, “விதிகளை மீறி கட்ச்ரோலி செஷன்ஸ் நீதிமன்றம் நடத்திய விசாரணை நீதியின் தோல்விக்குச் சமம். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வமான ஆதராங்களை நிறுவ அரசுத்தரப்புத் தவறி விட்டது. எனவே, முந்தைய தீர்ப்பினை ரத்து செய்கிறோம். குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.
மேலும், குற்றம்சாட்டப்பட்டவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மாவோயிஸ்ட்கள் தொடர்புடைய சில துண்டு பிரசுரங்கள் மற்றும் மின்னணு தகவல்கள் அவர் மாவோயிட் அனுதாபி என்பதையே காட்டுவதாக உயர்நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டிருந்தது.