போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட தி.மு.க சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக், ஜெய்ப்பூர் பங்களாவில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் நேற்று கைதுசெய்யப்பட்டார். இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து, போதைப்பொருள் தடுப்பு தொடர்பான புகார் மனுவை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ஆளுநரைச் சந்தித்து போதைப்பொருள் நடமாட்டம் குறித்தும், இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு சீரழிந்துவிடும் எனவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஆளுநரிடம் புகார் மனு அளித்திருக்கிறோம். ஆளுநரைச் சந்திக்கும்போதெல்லாம் இந்த போதைப்பொருள் அதிகரிப்பது குறித்துத் தெரிவித்திருக்கிறோம்.
இந்த நிலையில்தான் அண்மையில், தி.மு.க-வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணித் துணை அமைப்பாளராக இருக்கும் ஜாபர் சாதிக் என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு அலுவலர்கள் கைதுசெய்திருக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக ஜாபர் சாதிக் இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவருவதாகவும், பல்வேறு வெளிநாடுகளுக்கு 45 முறை போதைப்பொருள் கடத்தியதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.

அவரைக் கைதுசெய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, அதன் மூலம் கிடைத்த பணத்தைத் திரைப்படம் தயாரிக்கவும், ஹோட்டல் நடத்தவும், தி.மு.க நிர்வாகிகளுக்கு பணமளிக்கவும், உதயநிதியின் ட்ரஸ்ட்க்கு பணமளிக்கவும் செய்திருக்கிறார். இன்னும் பல்வேறு அரசியல் தொடர்புடையவர்களுடன் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர். இந்த ஜாபர் சாதிக்குக்குதான், சிசிடிவி கேமராக்கள் கொடுத்ததற்கு டி.ஜி.பி நற்சான்றிதழை வழங்கினார்
தி.மு.க குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் இயக்கிய படத்துக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தமிழ்நாடு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அது குறித்த தகவல்களைத்தான் ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம். அ.தி.மு.க ஆட்சியில் குட்கா தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் அதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லையே… ஆனால், தற்போது தமிழ்நாட்டின் இந்த நிலைக்கு காரணமான முதல்வரும், அவரின் மகனும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கடந்த10 நாள்களில் எவ்வளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருக்கிறது தெரியுமா?

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 10,000 போதை மாத்திரைகளும், மதுரையில் சுமார் ரூ.180 கோடி மதிப்புள்ள போதைப்பொருளும், மண்டபம் கடற்கரையில் ரூ.108, ரூ.90 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்றால், காவல்துறையின் செயல்பாடும், அரசின் நடவடிக்கையும் சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. மடியில் கனமில்லையென்றால், வழியில் பயமிருக்க வேண்டாமே, ஏன் தி.மு.க-வுக்கு இவ்வளவு பதற்றம், அச்சம் வருகிறது எனத் தெரியவில்லை. தவறு செய்யவில்லையென்றால், தி.மு.க எதிர்த்து நிரூபிக்கட்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.