காலாவதியான மருந்துகள் மக்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இன்றைய தினம் (13) உடல் சார்ந்த நோய் தினத்தை முன்னிட்டு இலங்கை மக்களுக்கான பொது இணையப் பக்கத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (13) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறிப்பாக மருந்துகளை கொள்வனவு செய்வதில் விசேட கொள்வனவு நடைமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவித்த சுகாதார அமைச்சர், கொவிட் நெருக்கடிக்கு பின்னர் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் ஒரு கடினமான சூழ்நிலை நிலவியதாகவும் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்..
தற்போது நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு விசேட தொகை கிடைத்துள்ளது, கொள்வனவு நடவடிக்கைகள் சிறப்பாக பேணப்பட்டு வருகின்றன.
அத்துடன், மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதில் சிற்சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் உள்ள 850 வகை அத்தியாவசிய மருந்துகளில் 820 முதல் 830 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது. பற்றாக்குறையான மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்கான நிதி வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் அனைவரும் அவதானித்து வருவதாக தெரிவித்த அமைச்சர், தற்போது மருந்து தட்டுப்பாடு என்ற விசேட பிரச்சினை எதுவும் இல்லை என்றும் மேலும் தெரிவித்தார்.