போரை தீவிரப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு; இஸ்ரேல் அதிரடி

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், போரை இஸ்ரேல் அரசு தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், காசாவிலுள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரால் ஏற்பட்டு உள்ள செலவுகளை ஈடுகட்டுவதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்படி, மொத்த பட்ஜெட்டுக்கான தொகை ரூ.13 லட்சத்து 41 ஆயிரத்து 981 கோடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால், ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்து 868 கோடி செலவினத்தில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் ராணுவ செலவினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.

போருக்கான செலவினங்களை ஈடுகட்டுவது மற்றும் ராணுவ அமைப்பை பலப்படுத்துவது என்ற இரண்டு நோக்கங்களும் அடங்கும். இந்த கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீட்டால், 2024-ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.6 சதவீத பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

அதனுடன், 2024 மற்றும் 2025 ஆண்டில் ரூ.46 ஆயிரத்து 389 கோடி அளவுக்கு நிதியானது சரிகட்டப்படும். இதேபோன்று, நாட்டில் வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளுக்கும் அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

வங்கிகளில் இருந்து கிடைக்கும் லாப தொகைக்கு வரி விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் அடங்கும். இந்த மேம்பட்ட பட்ஜெட்டானது, போருக்கான முயற்சிகளை அமல்படுத்த உதவியாக இருக்கும் என இஸ்ரேல் நிதியமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் ஷ்லோமி ஹெய்ஸ்லர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.