தலைவர்கள், விஐபி.,க்கள் பிரச்சாரத்துக்கு முன்கூட்டியே விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

மதுரை: “தலைவர்கள், விஐபி.,க்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டம், மைக் பிரச்சாரம் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நடப்பதை தவிர்க்க, ஆன்லைனில் 48 மணி நேரத்துக்கு முன்பே அனுமதி விண்ணப்பிக்க வேண்டும்.” என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. பிரச்சாரத்திற்கு குறுகிய காலமே உள்ளதால் தற்போது வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் ஒருங்கிணைப்பு போன்ற பணிகளை விரைவாக முடிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. வரும் 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 28-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. அதன்பிறகு வேட்பாளர்கள் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக களம் இறங்கிவிடுவார்கள். அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சித்தலைவர்கள், விஐபிகள், விரைவில் தொகுதிக்குள் வர ஆரம்பித்துவிடுவார்கள்.

திரும்பிய பக்கமெல்லாம், தேர்தல் பிரச்சாரமும், கட்சியினர் புடைசூழ வேட்பாளர் ஆதரவு கேட்டு வரும் பிரச்சார நடைப்பயணமும் களைகட்டும். பொதுக்கூட்டங்களில் மட்டுமில்லாது முக்கிய சாலை சந்திப்புகளில் தலைவர்கள், விஐபிகள் வேட்பாளர்களை திறந்த வெளி ஜீப் மைக் பிரச்சாரம் செய்யலாம். மேலும், உள்ளூர் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வேட்பாளரை ஆதரித்து சட்டசபை தொகுதிகள், வார்டுகள் அடிப்படையில் தினமும் ஒரு இடத்தில் பிரச்சாரம் செய்வார்கள்.


இதற்கு, அரசியல் கட்சிகள் முன்கூட்டியே தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். அதன்பிறகே அவர்கள், பொதுக்கூட்டம், தலைவர்கள் திறந்த வெளி ஜீப் மைக் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த மக்களவைத்தேர்தலில் அரசியல் கட்சிகள், தங்கள் வேட்பாளரை ஆதரித்து நடக்க உள்ள பொதுக்கூட்டம், திறந்த வெளி ஜீப் மைக் பிரச்சாரம் போன்றவற்றுக்கு ஆன்லைனிலே தேர்தல் ஆணையத்திடம் 48 மணி நேரத்திற்கு முன் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், “அரசியல் கட்சிகள், தங்கள் வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒரு ‘ஆப்’ தயார் செய்யப்பட உள்ளது. அதில், தேவையான ஆவணங்களை அப்லோடு செய்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்த அனுமதி வழங்குவதற்கு தனி அதிகாரிகள் குழுவை ஆட்சியர் நியமித்துள்ளார். ஒரே நாளில் ஒரே இடத்தை இரண்டுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்கலாம். அப்போது முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும்வகையில் பிரச்சாரம் செய்வதையும் தவிர்க்கலாம். இந்த அனுமதியை பெற அரசியல் கட்சிகள், பொதுக்கூட்டம், திறந்த வெளி ஜீப் மைக் பிரச்சாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கு அரசியல் கட்சிகள், கணினி தொழில்நுட்பம் தெரிந்த பணியாளர்களை உடன் வைத்துக் கொள்ள மாவட்ட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அரசியல் கட்சிகள், தங்களின் அன்றாட பிரச்சாரக்கூட்டம், விஐபிகள் திறந்த வெளி மைக் பிரச்சாரத்திற்கு விண்ணப்பிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆன்லைன் ஆப் தயார் ஆகிவிடும். அதுவரையிலான அனுமதியை மாவட்ட ஆட்சியரே நேரடியாக வழங்குவார்,’” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.