காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை நேற்று முன் தினம் மும்பைக்குள் வந்தது. மும்பையில் ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தினார். தாராவியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டு உரையாற்றினர். இதில் இதில் ஒட்டுமொத்த மும்பையையும் அதானிக்கு மாநில அரசு விற்பனை செய்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். நேற்று மும்பையில் உள்ள மகாத்மா காந்தியின் இல்லமான மணிபவனில் இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த ஆகஸ்ட் கிராந்தி மைதானத்திற்கு ஊர்வலமாக சென்று அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார்.
நேற்று இரவு நியாய யாத்திரையின் நிறைவு கூட்டம் மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, ”அதானி குரூப்புடன் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சிகளை சேர்ந்த தலைவர்களை மிரட்டி மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க வில் சேரும்படி நிர்ப்பந்தம் செய்கின்றனர். எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க அமலாக்கப்பிரிவும், சி.பி.ஐ.யும் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற நிர்ப்பந்தத்திற்கு நாங்கள் பணியமாட்டோம். நாங்கள் மோடியின் சர்வாதிகாரத்தை ஒடுக்க இங்கு வந்திருக்கிறோம்.
என்னிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 50 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் இறுதியில் அமலாக்கப்பிரிவுக்கு பயப்படாததால் மோடியை எளிதில் தோற்கடித்துவிட முடியும் என்று அந்த விசாரணை அதிகாரி என்னிடம் தெரிவித்தார். தேர்தல் பத்திரம் என்பது மிரட்டி பணம் பறித்தலின் மற்றொரு வழி. ஒரு நிறுவனம் ரூ.250 கோடி கூட லாபம் பார்க்கவில்லை. ஆனால் அந்த நிறுவனம் 1,500 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கி இருக்கிறது. ஒரு விமான ஒப்பந்தம் பெற சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு பயன்படுத்தப்பட்டது.

தேர்தல் பத்திரங்களுக்காக பல போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. நியாய யாத்திரையின் நோக்கம் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதுதான். ஆனால் அரசின் கட்டுப்பாட்டில் சோசியல் மீடியா இருப்பதாக சொல்லப்பட்டதால் நான் மக்களை நேரடியாக சந்திப்பது என்று முடிவு செய்தேன். நாங்கள் தனி நபருக்கு எதிராகவோ அல்லது ஒரு கட்சிக்கு எதிராகவோ போராடவில்லை. மக்களை தவறாக வழிநடத்த மோடி முகமூடி அணிந்துள்ளார். அந்த சக்தியை எதிர்த்து போராடுகிறோம். சினிமாவில் அவருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி நடக்கிறார். அவருக்கு 56 அங்குல மார்பு கிடையாது. அவர் ஒரு வெற்று மனிதர்.
நமது நாடு மோசமான சூழ்நிலையை கடந்து கொண்டிருக்கிறது. ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. ஜனநாயக அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளது. ஓட்டு இயந்திரம், அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ மற்றும் வருமான வரித்துறை இல்லாமல் பா.ஜ.க-வால் வெற்றி பெற முடியாது. இன்றைக்கு ஓட்டு இயந்திரம் ரத்து செய்யப்பட்டால் மோடியால் வெற்றி பெற முடியாது. மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் எனது அம்மாவிற்கு போன் செய்து அழுதார். அவர் பா.ஜ.க விற்கு எதிராக போராட எனக்கு சக்தி இல்லை. நான் சிறைக்கு சென்றுவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

அவர் மட்டுமில்லாமல் பலரும் பா.ஜ.க விற்கு பயந்துதான் அக்கட்சிக்கு சென்றுள்ளனர்” என்றார். இக்கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சரத்பவார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா, மெக்பூபா முப்தி, பிரகாஷ் அம்பேத்கர், பிரியங்கா காந்தி, ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY