மதுரை: “சேது ஆண்ட பூமியில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறேன். இந்தத் தேர்தல் மூலம் தொண்டர்கள் பலத்தை நிரூப்பித்துக் காட்டுவேன்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் வெளியிடுவது வழக்கம். இதன்படி, அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. இவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் நிறைவேறுமா என தேர்தலுக்குப் பிறகே தெரியும்.
சேது ஆண்ட பூமி ராமநாதபுரம். இங்கு நீதி, நியாயம் கிடைக்கும். இங்குள்ள மக்கள் எனக்கு நீதி வழங்கி, வெற்றி பெறச் செய்வார்கள் என நம்புகிறேன். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்க தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம். இருப்பினும், ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிடுகிறேன். இந்தத் தேர்தல் மூலம் தொண்டர்கள் பலத்தை நிரூப்பித்துக் காட்டுவேன்” என்றார்.
மேலும், அதிமுக தேர்தல் அறிக்கை பாஜகவுக்கு எதிராக இருப்பதாக செய்தியாளர்கள் கேட்டபோது, “அதுபற்றி அதிமுகவிடமே கேளுங்கள்” எனத் தெரிவித்தார்.