ராமநாதபுரத்தில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். அப்போது அதிமுக வேட்பாளர் ஜெயப்பெருமாளை ஆதரித்து பேசிய அவர், ”மாநிலத்தை ஆளும் திமுக-வும், மத்தியில் ஆளும் பாஜகவும் ராமநாதபுரத்தில் போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இங்கு அதிமுக வலுவானதாக இருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தேசிய கட்சியான பாஜக சார்பில் அவரு வருவாரு. இவரு வருவாரு என சொன்னார்கள். ஆனா எவரும் வரல. கடைசியில சுயேட்சை வேட்பாளராக ஒருத்தர் வர்றாராம்.

அவரை பற்றி இங்கே எல்லோருக்கும் தெரியும். ஒரே வண்டியில் பயணித்து, ஒரே தட்டில் சாப்பிட்டு, தேர்தல் பணி, மக்கள் பணி எல்லாவற்றையும் ஒன்றாய் இருந்து செய்தவர்கள் நாங்கள். இன்றைக்கு அவர் கட்சி வேட்டியை கட்ட முடியாம இங்க சுயேட்சை வேட்பாளரா நிற்கிறார். எந்த கட்சி அவருக்கு வேட்டி கொடுத்ததோ, எந்த கட்சி அங்கீகாரம் கொடுத்ததோ, எந்த கட்சி சின்னம் கொடுத்ததோ அதை எல்லாம் சொல்ல முடியாத பெரும் பாவத்திற்கு இன்றைக்கு ஆளாகியிருக்கிறார் என்றால் நாம் என்ன செய்ய முடியும். 3 முறை முதலமைச்சராக்கி அழகு பார்த்த கட்சியின் வேட்டியை கட்ட முடியாத நிலை ஓ.பி.எஸ்சை தவிர இந்திய அரசியலில் யாருக்கும் நேரவில்லை.
கிராமங்களில் உள்ள அடிமட்ட தொண்டன் கூட தனது மரணத்தின் போது தனது உடலில் அதிமுக கொடியை போர்த்த வேண்டும் என்றே நினைப்பார்கள். அப்படிப்பட்ட அதிமுக கொடியை சொந்தம் கொண்டாட முடியாமல் இன்றைக்கு யாசகம் பேற்று ஒரு தொகுதியில் நிற்கிறார் அவர். இந்த பொழப்பு எதற்கு. இந்த ஒத்த தொகுதியில் நின்று நீங்கள் எதை சாதிக்க போகிறீர்கள். மானம், ரோஷம், வெட்கம், கட்சி இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு ராமநாதபுரத்துல வந்து நிக்கிறீங்க. தேனி தொகுதிக்குள்ள போக முடியாத நீங்க நன்றிக்கடனாக தொகுதியை விட்டு கொடுத்தாக சொல்றீங்க. உங்களை சுமந்த அதிமுக தொண்டர்களிடம் நீங்கள் ஓட்டு கேட்டு போகமுடியாததால கடைசியா இங்க வந்து நிக்குறீங்க.

கழகத்தின் கோயிலாக விளங்கும் தலைமை கழகத்தை இடித்துவிட்டு இரட்டை இலை சின்னத்தை முடக்கப்போவதாக பேட்டி கொடுத்தீங்க. ஆனா நீங்க பேட்டி கொடுத்தது தப்பு. முதலில் நீங்க அதிமுக கட்சி வேட்டியை கழட்டுங்கன்னு உயர் நீதிமன்றம் நெத்தியடியாக கூறியது. வெற்றி சின்னமாக விளங்கும் இரட்டை இலையை தேர்தல் களத்தில் தடுக்க நினைக்கும் எந்த கொம்பனையும் அதிமுக தொண்டர்கள் வீழ்த்தி காட்டுவார்கள். துரோகத்தையும், துரோகியையும் ராமநாதபுரம் மக்கள் ஏற்கமாட்டார்கள். துரோகத்தை விதைக்க வரும் உங்களை ராமநாதபுரம் மக்களும், அதிமுக தொண்டர்களும் நெஞ்சுறுதியோடு எதிர்ப்பார்கள். ஜெயப்பெருமாளை வெற்றி பெற செய்வார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY