இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்தவர் ஷிகர் தவான். ரோகித் சர்மாவுடன் இணைந்து 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தவர், திடீரென சர்வதேச போட்டியில் இருந்து காணாமல் போனார். அவரை 20 ஓவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் பிசிசிஐ தேர்வு செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. இந்திய அணிக்காக 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஷிகர் தவான், 2022 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக சாட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டி தான் அவருக்கு சர்வதேச கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கிறது.
அதற்கு முன்பே இந்திய அணிக்கான 20 ஓவர் போட்டியில் இருந்தும் ஷிகர் தவான் நீக்கப்பட்டுவிட்டார். கடைசியாக இலங்கை அணிக்கு எதிராக 2021 ஆம் ஆண்டு கொழும்பு மைதானத்தில் இந்திய அணி விளையாடிய 20 ஓவர் போட்டியில் அவர் விளையாடி இருந்தார். அதன்பிறகு அந்த பார்மேட்டிலும் தவான் இந்திய அணிக்காக விளையாடவில்லை. அதற்கு காரணம் நிறைய இளம் வீரர்கள் வருகை அவருடைய இடத்தை கேள்விக்குள்ளாக்கியது. நன்றாக விளையாடிக் கொண்டிருந்தபோதும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற முடிவை பிசிசிஐ எடுத்ததால் அவருடைய இடம் பறிபோனது. சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோர் தவானின் இடத்தில் இந்திய அணியில் இப்போது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இருப்பினும் நம்பிக்கையை கைவிடாத தவான் ஐபிஎல் போட்டிகளில் இன்னும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த ஐபிஎல் போட்டியிலேயே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 16 பந்துகளில் 22 ரன்கள் விளாசிய தவான், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 5 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்ததால் அடித்து ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார்.
இருப்பினும் மோசமாக ஆடிக் கொண்டிருக்கிறார் என்ற அளவில் எல்லாம் தவான் பேட்டிங் இல்லை. இதனைப் பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள், நல்லா விளையாடிக் கொண்டிருக்கும் தவானை எல்லாம் ஏம்பா டீமில் இருந்து ஓரங்கட்டிவிட்டீர்கள், அவருக்கு இன்னொரு வாய்ப்பை கொடுக்கலாமே! என பிசிசிஐக்கு வற்புறுத்தியுள்ளனர்.