திருவண்ணாமலை: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வேட்பாளர் அண்ணாதுரை வந்திருந்தார். அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது அறைக்குள் 6 பேர் இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல், ஆட்சியர் அலுவலகத்தில் 4-வது நாளாக இன்று (மார்ச் 25) நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் வேட்பு மனுக்களை பெற்றுக் கொண்டார். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் 4 பேர் மட்டும் வர வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை இன்று நண்பகலில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் 4 பேர் உடனிருக்க, 4 அடி இடைவெளியில் திமுக வழக்கறிஞர் கார்த்திகேயன் உட்பட 2 பேர் நின்றிருந்தனர்.
உறுதிமொழி வாசிக்கப்படும்போதும், திமுக சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த அண்ணாதுரையுடன் 6 பேர் உடனிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன. மேலும், தனது பாக்கெட்டில் இருந்த புகைப்படங்களை எடுத்து, 6-வது நபரான திமுக பிரமுகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்த அண்ணாதுரை வழங்கினார். இவை அனைத்தும், ஆட்சியர் அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருக்கிறது.
இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னதாக, அதிமுக சார்பில் போட்டியிட கலியபெருமாள் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, 4 பேர் மட்டும் உடனிருக்க வேண்டும் என ஆட்சியர் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஆரணி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட மாவட்ட செயலாளர் எம்எஸ் தரணிவேந்தன் நண்பகல் வேட்பு மனு தாக்கல் செய்ய, ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் 4 பேர் உடனிருந்தனர். அப்போது, தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலரின் அறைக்குள், 5-வது நபராக ஆரணி முன்னாள் திமுக எம்எல்ஏ சிவானந்தம் நுழைந்தார்.
இதையறிந்த தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி, வேட்பு மனு தாக்கல் செய்யும்போது 5-வது நபர் உடனிருக்கக் கூடாது என எச்சரித்தார். இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ சிவானந்தத்தை, அறையில் இருந்து வெளியேறுமாறு தேர்தல் நடத்தை விதிகளை கூறி, எம்.எஸ்.தரணிவேந்தன் கேட்டுக்கொண்டார். அதன்படி அவரும் வெளியேறினார். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினியிடம் தரணிவேந்தன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.