ஐம்பத்தி ஐந்து வயதில் அம்மா போன பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பேசுவதை நிறுத்திக்கொண்டார் அப்பா. தொடக்கத்தில் பெரிதாக ஏதும் தோன்றவில்லை மகனுக்கு.இனி, அப்பாவோடு சண்டை பிடிக்கவும், குறை சொல்லவும், அதட்டவும் ஆளில்லை. அப்பா நினைத்தபடி இருக்கலாம். ஆனாலும், ஏன் இப்படி அமைதியாகிப் போனார்… சிரிப்பதை முழுவதுமாக மறந்து போனார்.
இது தொடர்ந்தபோது… தனக்குத்தானே பலமுறை கேட்டுக்கொண்டாலும் பதில் இல்லை மகனுக்கு. கொஞ்ச நாள்கள் கழிந்த தும் அப்பா இயல்புக்குத் திரும்புவார் என நம்பிய மகனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. பெரிதாக எதையும் வெளிப்படுத்தாத முகத்தில் அப்பா என்ன நினைக்கிறார் என்றே கண்டுபிடிக்க இயலவில்லை.
குளியல் மற்றும் கழிவறை தனித்தனியே கொண்ட பிரத்யேக அறை அவருக்கு. அருகில் இருக்கும் பார்க்குக்கு வாக்கிங் அழைத்துச் செல்ல, வீடு திரும்பியதும் பேப்பர் படித்துக் காண்பிக்க, வெந்நீர் வைத்து முதுகு தேய்த்துக் குளிக்க வைக்க, காலை டிபன் பிறகு மாத்திரை, மதிய சாப்பாடு, மாலை காபி, இரவு உணவு முடித்து தூங்கப்போகும் முன் கை, கால்களை அமுக்கி விடுவதற்கென உதவிக்கு நடுத்தர வயதில் எப்போதும் ஓர் உதவியாள் கூடவே இருப்பார். அதனால் தன் அறையை விட்டு வெளியே வருவதையும் பெரும்பகுதி குறைத்துக் கொண்டார் அப்பா. சதா தன் அறையில் இருக்கும் குஷன் போட்ட சாய்வு நாற்காலியில் கண் மூடியபடியே பெரும் பகுதியைக் கழிப்பது அவருக்கு வாடிக்கை யாகிப் போனது.

பேரப்பிள்ளைகள், மருமகள், மகன் எல்லோருமாக கல்லூரி, வேலை முடித்து வீடு திரும்பியதும் உணவு மேஜையில் சிரித்துப் பேசும் சத்தம் கேட்கும்போதெல்லாம், ‘எல்லாரும் சாப்பிடறாங்களா… காபி குடிக் கிறாங்களா?’ என தன் உதவியாளர் மூலம் கேட்டுத்தெரிந்து கொள்வார் அப்பா.
‘இன்னிக்கு அப்பா என்ன சொன்னாரு செல்வம்?’ என மகன், தன் உதவியாளரைக் கேட்பது காதில் விழுந்தாலும் பதில் பேச மாட்டார் அப்பா. ஞாயிற்றுக்கிழமைகளில் உதவியாளருக்கும் விடுமுறை என்பதால் அறையை விட்டு வெளியே வருவதற்கே அப்பாவுக்கு தர்ம சங்கடமாக இருக்கும். காபி, டிபன், மதிய உணவு இத்யாதிகளை பேரப் பிள்ளைகள், மருமகள், மகன் என சுழற்சி முறையில் கொண்டு தருவது வாடிக்கை.
“வெளியே வந்து உக்காருங்க தாத்தா. எப்பவும் ஏன் ரூமுக்குள்ளேயே இருக்கீங்க?” என பேரன் கேட்கும்போது பதில் சொல்லத் தெரியாமல் அமைதியாக இருப்பார்.
ஒரு சனிக்கிழமை காலை முதியோர் மருத்துவரை வீட்டுக்கே வரவழைத்து அப்பா வுடன் ஒரு மணி நேரம் பேசவைத்துப் பார்த்த போது, “மனைவி இறந்ததுலேருந்து தனக் குன்னு எந்த உரிமையும் இல்லேன்னு அவரு மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு. அவருடைய வசதிக்காக தனியா ஒரு உதவியாளை வெச்சது அவரை இன்னும் தனிமைப்படுத்தறாப்போல இருக்கு. வீட்டு உறவுகளுக்கும் தனக்கு மான பாலம் தன் மனைவி இறப்போட துண்டாகிப் போச்சுன்னு நினைக்கிறார். இன்னும் வெளிப்படையா சொல்லணும்னா… உங்க எல்லார்கிட்டேயும் சகஜமா பேசத் தெரியாத ஒரு கூச்சம், உரிமையா அடுக்களை வரைக்கும் வந்து தனக்கு வேண்டியதைக் கேட்டு வாங்கிச் சாப்பிட ஒரு தயக்கம் அவரைத் தடுக்குது” என டாக்டர் சொல்லி முடித்ததும் என்னவோ போலிருந்தது வீட்டிலுள்ளவர்களுக்கு. டாக்டரை வழி யனுப்பியதும் அப்பாவின் உதவியாளருக்கு விடுப்புக் கொடுத்து அனுப்பிவிட்டு, அப்பாவின் சாய்வு நாற்காலியின் கீழே அப்பாவின் காலுக்கடியில் உட்கார்ந்த மகன், “என்கிட்ட பேசவும் கேட்கவும் வெளிப்படுத்த வும் என்னப்பா வெட்கம்? என்ன தயக்கம்?” என்றார்.
“உதவிக்கு ஆள் வேணாம்ப்பா… முடிஞ்ச போது நீ வந்து என் ரூமை எட்டிப் பாத்துட்டுப் போயேன்… உன் அம்மாவ நெனச்சு நிம்மதியா நாலு வார்த்தை எனக்கு நானே பேசிக்க கூட முடியல. என்ன ஏன் விட்டுட்டுப் போனேன்னு அவகிட்ட சண்டை போட்டு மானசீகமா மன்னிப்பு கேக்க முடியல. செல்வத்துக்கு முன்னால எதையுமே வெளிக்காட்டிக்க முடி யாம… எப்பவுமே மௌனமாத்தான் இருக் கேன்” என அப்பா சொன்னபோது அடக்க முடியாமல் மகனுக்கு அழுகை வந்தது.
நம் அம்மாவுக்கும் அப்பாவுக்குமான உலகுக்கென்று தனி மொழி உண்டு.சமிக்ஞைகள் உண்டு. உலகுக்காக அவர்கள் காட்டும் உணர்வுப் படிமங்களுக்கு அடியில் ஒளிந்திருக்கும் உண்மை அவர்களுக்கு மட்டுமே புரியும். பூங்கொத்தும், புன்னகையும், கைகோத்த நீண்ட நடையும், காதலை அவ்வப் போது ஊர்ஜிதம் செய்யும் துரிதகதி கட்டிப் பிடிப்புகளும் இல்லாத அவர்களது உலகுக்குள் நுழைவதற்கான கடவுச்சீட்டு யாருக்கும் கிடையாது.
ஒருபக்கமாக நடை சாயத்தொடங்கி, நரை எட்டிப் பார்க்கின்ற வயதில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மீண்டும் காதல் செய்தால்தான் என்ன? இருக்கும்போதான அத்தனை சண்டைகளும் அபிப்ராய பேதங் களும் அன்பையும் அக்கறையையும் ஆதர மாகக் கொண்டவை என்பது உறவை இழந்த பின் தெரியும்போதுதான் எவ்வளவு வலி?
– முதிரும்…