வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மதுரை நாம் தமிழர் வேட்பாளர் சத்தியாதேவி மயக்கம்

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்தியாதேவி வெயிலில் மயங்கி கீழே அமர்ந்தார். அவருக்கு தண்ணீர் கொடுத்து நெற்றியில் திருநீறு பூசி, கைத்தாங்கலாக அவரை அழைத்த சென்று வேட்புமனு தாக்கல் செய்ய வைத்ததால் சற்றே பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட், அதிமுக, பாஜக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதனால், அரசியல் கட்சியினர் ஆட்டம், பாட்டம், ஊர்வலத்தால் ஆட்சியர் அலுவலகமே திருவிழா போல் காணப்பட்டது. நேற்று அந்த பரபரப்பு ஒரளவு அடங்கிய நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் ஒருவர் பின் ஒருவராக இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்தியாதேவி, நேற்றே வேட்புமனு தாக்கல் செய்ய இருந்துள்ளார். ஆனால், உடல்நலகுறைவால் அவரால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வர முடியவில்லை.

இந்நிலையில், இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்தியாதேவி, தனது கட்சியினருடன் ஊர்வலமாக வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்தார். அப்போது தமுக்கத்தில் உள்ள தமிழ் அன்னை சிலை, அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து பிரபாகரன் படத்தை வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஆட்சியர் அலுலவலகம் அருகே வந்தபோது, திடீரென்று அவருக்கு மயக்கம் வந்தது. சோர்ந்துபோய் தரையில் அமர்ந்துவிட்டார். பதற்றமடைந்த கட்சியினர், அவருக்கு தண்ணீர் கொடுத்து, நெற்றியில் திருநீறு பூசிவிட்டனர். அதன்பிறகு அவரை மெதுவாக ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்று ஆட்சியர் சங்கீதாவிடம் வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்தனர்.

மாற்று வேட்பாளராக கண்மணி வேட்புமனு தாக்கல் செய்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண் ஜெயசீலன், கிழக்கு மண்டல செயலாளர் அப்பாஸ், மேற்கு மண்டல செயலாளர் சிவானந்தம், வழக்கறிஞர் பாசறை விக்னேஷ்குமார் உடனிருந்தனர்.

வேட்பாளர் சத்தியாதேவி, ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வரும்போது சோர்வுடன் காணப்பட்டார். கோடை வெயில் தற்போது மதுரையில் அதிகமாக அடிக்கும்நிலையில் இந்த வெயிலில் அவர் தாக்குப்பிடிக்க முடியாமல் அயர்ந்து கீழே அமர்ந்துவிட்டதாக கட்சியினர் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.