குழந்தை இல்லை என கேலி செய்யப்பட்டதால் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதான செல்வம் என்ற இளைஞருக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. அதைக் காரணமாக வைத்து உடன் வேலை செய்தவர்கள் கேலி செய்ததால் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தையின்மையால் தம்பதிகள் உளவியல்ரீதியாக என்ன மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பது பற்றி பேசுகிறார் மதுரையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சிமோனா:
”குழந்தை இல்லாததால் தம்பதிகளுக்கு உண்டாகும் உளவியல் பிரச்னைகள் சமூக அழுத்தங்களில் இருந்தே உருவாகின்றன. ‘குழந்தை இல்லையா?’ எனத் திரும்பத் திரும்ப சுற்றி இருப்பவர்கள் கேட்பது, குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே ஒரு தம்பதியின் அதிகபட்ச சாதனை என்ற ரீதியில் சுற்றி இருப்பவர்கள் பேசுவது போன்றவை தம்பதிகளிடம் அழுத்தத்தை உண்டாக்கும்.
இதுபோன்ற சூழலை தம்பதிகளாகச் சேர்ந்தும் தனித்தனியாகவும் சந்திக்க நேர்கிறது. நம்முடைய சமுதாய சூழலில் குழந்தை இல்லாததற்கு பெண்கள்தான் காரணம் என்ற பிம்பம் உள்ளது. இது பெண்களுக்கு மனதளவில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தையே பிறக்காமல் போய்விடுமோ என்ற பயம் அதிகரிப்பதோடு, எப்படியாவது ஒரு குழந்தை பெற்றாக வேண்டும் என்ற தவிப்பு அதிகமாகத் தொடங்கிவிடும்.

குழந்தை இல்லாதது தம்பதிகளின் உறவில் விரிசலை உண்டாக்கக்கூட வாய்ப்புள்ளது. அவர்களின் பெரும்பாலான பேச்சு,செயல் அனைத்தும் குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றியே இருக்கும். குழந்தை இல்லாததற்கு ஒருவர் மாற்றி ஒருவர் குறைசொல்லிக் கொண்டு ஒருவித ஆற்றாமையில் தவிக்கவும் வாய்ப்புள்ளது. இது அவர்களின் உறவில் ஒருவித தொய்வை உண்டாக்கலாம்.
குழந்தையின்மைக்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளுக்கு அதிக செலவாகலாம். இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதுவும் அவர்களின் மனக்கவலையை அதிகரிக்கும். குழந்தை இல்லாததை பிறர் குறை கூறுவார்களே என்ற பயம் மற்றும் தயக்கத்தில் சமூகத்திலிருந்து விலகி தனிமையில் இருக்கத் தொடங்குவார்கள். இதனால் தற்கொலை எண்ணங்கள் எழக்கூடும்.

இத்தகைய உளவியல் சிக்கல்களில் இருந்து விடுபட தம்பதிகள் அவர்கள் குழந்தையின்மையை அணுகும் மனநிலையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். குழந்தை பெற்றுக்கொள்வது அவசியம்தான். அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் சிகிச்சை பெறுவதும் சரியானதுதான். சிகிச்சை முறைகளால் பயனில்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். ஆனால் குழந்தை இல்லையெனில் வாழ்க்கையே இல்லை என்பது போன்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.
பிரச்னைக்கு மாற்றுத் தீர்வு என்ன என்பது பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர, அதனால் மன அழுத்தம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையை தத்தெடுப்பது, வாடகைத் தாய் முறை என வேறு ஏதும் வழிகள் உள்ளனவா என ஆராய வேண்டும். குழந்தையை தத்தெடுப்பதில் பலருக்கு தயக்கங்களும், குழப்பங்களும் உள்ளன. தேவைப்பட்டால் அவை குறித்து உளவியல் ஆலோசனை பெறலாம்” என்கிறார்.

இந்நிலையில் குழந்தையின்மை பிரச்னை ஏன் தற்போது அதிகமாக உள்ளது குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் மகப்பேறு மருத்துவரான அரவிந்த் சந்தோஷிடம் கேட்டோம்.
”குழந்தையின்மைக்கான சிகிச்சைகளைத் தொடங்குவதற்கு முன்பு அதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும். சில சமயங்களில் பிரச்னை ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ இருக்கலாம். இல்லையெனில் இரண்டு பேருக்கும்கூட சிகிச்சை தேவைப்படும் சூழல் இருக்கலாம். இந்த மூன்று சூழ்நிலைகளுக்கும் சமமான அளவில் சாத்தியங்கள் உள்ளன.
குழந்தையின்மை பிரச்னை அதிகரித்துள்ளதற்கு வாழ்வியல் மாற்றங்களே காரணமாகும். துரித உணவுகள், குறைந்த உடல் உழைப்பு, அதிக நெகிழிப் பயன்பாட்டால் ஹார்மோன் அளவுகள் மாற்றம் பெறுவது எனப் பல்வேறு காரணங்கள் உள்ளன. இதுதவிர, நிறைய பேர் தங்களுடைய படிப்பு,வேலை போன்ற காரணங்களால் மிகவும் தாமதித்து குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவை எடுக்கிறார்கள். இதுவும் குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். சினைப்பை நீர்க்கட்டி (PCOS) போன்ற பிரச்னைகளை நிறைய பெண்களிடம் பார்க்க முடிகிறது.

இதுவும் குழந்தை பெற்றுக்கொள்வதில் பிரச்னையை உண்டாக்கும். ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துகொண்டே வருவதாக உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. குழந்தையின்மைக்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படும். சிகிச்சையும் ஒவ்வொரு தம்பதியின் பிரச்னைகளுக்கு ஏற்ற வகையில் மாறுபடும். தற்போது நிறைய மேம்பட்ட சிகிச்சை முறைகள் நம் நாட்டிலேயே நம் மாநிலத்திலேயே கூட இருக்கின்றன. ஆண்களுக்கு பொதுவான பிரச்னை என எடுத்துக் கொண்டால் விந்தணுக்கள் குறைவாக இருப்பதுதான்.
அதுபோன்ற சூழலில் விந்தணுக்களை அதிகப்படுத்த அவர்கள் வாழ்வியல் மாற்றங்கள் செய்ய வேண்டியது இருக்கும். சத்தான உணவு எடுத்துக்கொள்வதோடு உடற்பயிற்சி செய்வது, மது,புகைப் பழக்கங்களைக் கைவிடவும் அறிவுறுத்தப்படுவர். இதுதவிர தேவைப்பட்டால் மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். விந்தணு வெளிவரும் பாதையில் ஏதாவது பிரச்சனை இருந்தால் சில சூழலில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
பெண்களில் சிலருக்கு கரு உருவாவதிலேயே பிரச்னை இருக்கும். சிலருக்கு கரு உருவாகி அது நிலைத்து இருக்காது. அவர்களின் பிரச்னைக்கு ஏற்ற வகையில் சிகிச்சை முறை மாறுபடும். பாலியல் மருத்துவரின் உதவியோ அல்லது மனநல ஆலோசகரின் உதவியோ தேவைப்படலாம்.
செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்க இரண்டு முறைகள் உள்ளன. IUI-Intra uterine insemination என்ற சிகிச்சையில் ஆணின் விந்தணுக்கள் செயற்கை முறையில் மருத்துவ கண்காணிப்பில் பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படும். IVF- In Vitro fertilization சிகிச்சையில் பெண்ணின் கரு முட்டைகள் வெளியே எடுக்கப்பட்டு ஆய்வக சூழலில் கரு முட்டைக்குள் விந்தணுக்கள் செலுத்தப்படும். கரு உருவானபின் மீண்டும் அது பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படும். IUI சிகிச்சையை ஒப்பிடும்போது IVF சிகிச்சை அதீத கவனத்துடன் பல நிபுணர்களின் மேற்பார்வையில் நிகழ்த்தப்படும்.

செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தற்போது நிறைய உருவாகிவிட்டன. அரசு மருத்துவமனைகளிலும் குழந்தையின்மைக்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் IUI சிகிச்சை வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள சில அரசு மருத்துவமனைகளில் IVF சிகிச்சை முறையையும் தொடங்குவதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தையின்மைக்கு சிகிச்சைகள், தீர்வுகள் நிறைய உள்ளன. அதை விட்டுவிட்டு தற்கொலை செய்யும் முடிவு அவசியமற்றது” என்றார்.