கேரளாவில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு பாஜக ஏற்கெனவே 12 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இந்நிலையில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்று அறிவித்தது.
இதன்படி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் அவருக்கு எதிராக கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.
இத்தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனி ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். கே.சுரேந்திரன், கடந்த 2020 முதல் கேரள பாஜக தலைவராக பதவி வகிக்கிறார். சபரிமலை கோயிலுக்குள் இளம் பெண்கள் நுழைவதற்கு எதிரான போராட்டத்தை இவர் தலைமையேற்று நடத்தினார்.
எர்ணாகுளத்தில் கல்வியாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர், சங்கரா சம்ஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தராகவும் கேரள அரசுப் பணிகள் தேர்வாணைய தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 2019-ல் பாஜகவில் இணைந்தார்.
கொல்லத்தில் நடிகரும் பாஜக தேசிய கவுன்சில் உறுப்பினருமான ஜி.கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். கடந்த 2021-ல் பாஜகவில் சேர்ந்த இவர், அதே ஆண்டில் திருவனந்தபுரம் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.
ஆலத்தூரில் டி.என்.சரசு போட்டியிடுகிறார். இவர், பாலக்காட்டில் உள்ள விக்டோரியா அரசு கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆவார்.