
காமெடி நடிகர் சேஷூ காலமானார்
மாரடைப்பு காரணமாக சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் சேஷூ(60), காலமானார்.
நடிகர் சந்தானத்தின் காமெடி குழுவில் இருந்து வந்தவர் சேஷூ. சின்னத்திரையில் சந்தானம் ‛லொள்ளு சபா' நிகழ்ச்சியை வழங்கிய காலம் முதல் அவருடன் பயணித்து வந்தார். அந்த நிகழ்ச்சி மூலமே ரசிகர்களை கவர்ந்த சேஷூ தொடர்ந்து சந்தானத்துடன் வெள்ளித்திரையிலும் பயணித்தார். குறிப்பாக சந்தானம் நடித்த ‛ஏ1' படம் மற்றும் சமீபத்தில் வெளியான ‛வடக்குப்பட்டி ராமசாமி' போன்ற படங்களில் இவரின் காமெடி ரசிகர்களை கவர்ந்தது.
சென்னையில் வசித்து வந்த சேஷூவிற்கு கடந்த மார்ச் 15ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்று(மார்ச் 26) காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை(மார்ச் 27) காலை நடக்கிறது.