இறுதி கட்டத்தில் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்'

கார்த்தி நடித்த 'சகுனி' படத்தை இயக்கிய சங்கர் தயாள் தற்போது இயக்கி வரும் படம் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்'. குழந்தைகளை மையமாக வைத்து இதுவரை பேண்டசி படங்கள், கார்டூன் மற்றும் அனிமேஷன் படங்கள் வந்திருக்கிறது. முதன் முறையாக குழந்தைகளை வைத்து அரசியல் படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் யோகி பாபுவும், செந்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர இமயவர்மன், அத்வைத் ஜெய் மஸ்தான், ஹரிகா, பவஸ் ஆகிய 4 சிறுவர்கள் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் 'பருத்தி வீரன்' சரவணன், சுப்பு பஞ்சு, லிஸ்ஸி ஆண்டனி, 'பிராங்ஸ்டர்' ராகுல், 'பிச்சைக்காரன்' மூர்த்தி, வையாபுரி, சித்ரா லட்சுமணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது.

படம் பற்றி சங்கர் தயாள் கூறும்போது, “குழந்தைகளை வைத்து அரசியல் படம் எதுவும் இதுவரை வரவில்லை. அவர்கள்தான் இந்தியாவின் வருங்காலத் தூண்கள். அவர்களுக்கு அரசியல் தெளிவும் அறிவும் படிக்கிற காலத்திலேயே முக்கியம் என்பதால் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்திய அரசியல் நகைச்சுவை படமாக இந்த படத்தை உருவாக்கி உள்ளேன்.

செந்தில் குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடத்துகிறார். அதன் பொதுச் செயலாளராக யோகிபாபு இருக்கிறார். அவர் தானே தலைவராக சில சூழ்ச்சிகள் செய்கிறார். இவர்களுக்கு இடையில் ஒரு பள்ளி மாணவனும் போட்டியிடுகிறான். அதன் பிறகு நடக்கும் விஷயங்களை காமெடியாக சொல்லும் படம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.