'கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்?' – திக்விஜய் சிங் கேள்வியும், கங்கனா எதிர்வினையும்

புதுடெல்லி: “கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்? பிரதமர் ஏன் இப்படி அடி, முடி தெரியாமல் பேசுகிறார்?” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் எழுப்பிய கேள்விக்கு கங்கனா ரணாவத் பதிலடி கொடுத்துள்ளார்.

சமீப காலமாக கச்சத்தீவு விவகாரம் தேசிய அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரம் குறித்து தனது விமர்சனத்தை இன்றும் (ஏப்.10) முன்வைத்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ”ஒரு வாரத்துக்கு முன்பு நாம் கச்சத்தீவு பிரச்சினையை எழுப்பினோம்.

காங்கிரஸும், திமுகவும் எப்படி ஒன்றாக சேர்ந்து இந்தியாவின் உயிரோட்டமான ஒரு பகுதியை வேறு நாட்டுக்கு தாரைவார்த்துக் கொடுத்தார்கள் என்பது குறித்து அரசு ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அப்போதுதான் தெரிந்தது, அவர்கள் தமிழகத்துக்கு இழைத்த அந்த துரோகம். இண்டியா கூட்டணியினர் இந்தியாவின் இறையாண்மையை சேதப்படுத்தியதற்கு பாவப்பட்ட தமிழக மீனவர்கள்தான் அதற்கான விலையைக் கொடுத்து வருகின்றனர். திமுகவும், காங்கிரஸும் செய்த இந்த துரோகத்துக்காக, வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்கள்தான் அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதனிடையே, போபாலில் இன்று செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், “கச்சத்தீவில் யார்தான் வசிக்கிறீர்கள்? பிரதமர் மோடி ஏன் இப்படி அடி, முடி தெரியாமல் பேசுகிறார்?” என்று விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள நடிகையும், இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதி பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத், “அக்‌ஷய் சின் பகுதியை தரிசு நிலம் என்று நேரு அழைத்ததையே திக்விஜய் சிங்கின் “கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்?” என்ற கேள்வி பிரதிபலிக்கிறது. நேருவின் சிந்தனை இன்னமும் காங்கிரஸ்காரர்களின் மனங்களில் அப்படியே இருக்கிறது. இந்த மனப்பான்மை இருந்ததாலேயே இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் காங்கிரஸால் வளர்ச்சியைக் கொடுக்க முடியவில்லை.

ஆனால், இது புதிய இந்தியா. இங்கே இந்தியாவின் மிக உயரமான தஷிகங் வாக்குப் பதிவு மையத்திலும் குழாய் மூலம் நீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோமிக் போன்ற இமாச்சலப் பிரதேச கிராமங்களுக்கு சாலை வசதி கிட்டியுள்ளது. வீடுதோறும் மின்சாரம் கிட்டியுள்ளது. நாட்டின் புவிபரப்பின் மீதான உரிமையில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படாது. அப்படியான சிந்தனை உடையவர்களுக்கு தேசம் நிச்சயம் தகுந்த பதிலடி கொடுக்கும்” என்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்திட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.