விஜயவாடா: விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இன்று (ஏப்.13) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த ஜெகன் மோகன் மீது மர்ம நபர் ஒருவர் தூரத்திலிருந்து கல்லை வீசி தாக்கினார். அந்த கல் ஜெகன் மோகனின் புருவத்துக்கு சற்று மேல பட்டதில், அவருக்கு சிறிய ரத்தக் காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்த அதிகாரிகள் முதல்வர் ஜெகன் மோகனுக்கு உடனடியாக முதலுதவி செய்தனர். ஜெகன் மோகன் ரெட்டி நெற்றியில் காயத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெகன் மோகன் மீது கல்வீசியது யார்? என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதே போல கடந்த 2018ஆம் ஆண்டு, விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்த ஊழியர் ஒருவர் ஜெகன் மோகனை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.