மகாராஷ்டிராவில் நடக்கும் மக்களவை தேர்தல் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியதாக அமைந்திருக்கிறது. கடந்த மக்களவை தேர்தலில் யாரை எதிரிகளாக நினைத்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்தார்களோ அவர்கள் தற்போது நடக்கும் தேர்தலில் அதே தலைவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவின் நாண்டெட் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் பா.ஜ.க வில் சேர்ந்தார். கடந்த மக்களவை தேர்தலில் நாண்டெட் தொகுதியில் பா.ஜ.க-வின் பிரதாப் பாட்டீல் அசோக் சவானை எதிர்த்து போட்டியிட்டார். அப்போது பிரதமர் நாண்டெட்டிற்கு பிரசாரத்திற்கு வந்த போது அசோக் சவான் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். ஆனால் இப்போது அதே அசோக் சவான் பா.ஜ.க-வில் ராஜ்ய சபை உறுப்பினராகி இருக்கிறார்.

தற்போது அதே அசோக் சவான் தன்னை தேர்தலில் தோற்கடித்த பா.ஜ.க-வின் பிரதாப் பாட்டீலை ஆதரித்து பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியும், அமித் ஷாவும் அசோக் சவானை பாராட்டி பிரசாரத்தில் பேசுகின்றனர். கடந்த மக்களவை தேர்தலில் பாராமதி தொகுதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே வெற்றி பெற துணை முதல்வர் அஜித் பவார் இரவு பகலாக பாடுபட்டார். ஆனால் இப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்த பிறகு அதே பாராமதி தொகுதியில் சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார், சுப்ரியாவிற்கு எதிராக பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். அஜித் பவாரின் சொந்த சகோதரர் ஸ்ரீனிவாஸ் இத்தேர்தலில் சுப்ரியாவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். பீட் தொகுதியில் கடந்த தேர்தலில் பா.ஜ.க சார்பாக பிரித்தம் முண்டே போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை இதே தொகுதியில் பிரித்தம் முண்டேயின் சகோதரி பங்கஜா முண்டே பா.ஜ.க சார்பாக போட்டியிடுகிறார்.
2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பங்கஜா முண்டே போட்டியிட்டபோது அவரை எதிர்த்து போட்டியிட்ட பங்கஜாவின் ஒன்றுவிட்ட சகோதரர் தனஞ்சே முண்டே பங்கஜாவை தோற்கடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் காட்சிகள் முற்றிலும் மாறிவிட்டது. தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்த போது அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தனஞ்சே முண்டே இருந்தார். அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இப்போது பா.ஜ.க-வோடு கூட்டணி அமைத்துள்ளது. இதனால் இப்போது பங்கஜா முண்டேயிக்கு ஆதரவாக தனஞ்சே முண்டே பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்த பிறகு, இரு கட்சியிலும் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். மும்பையில் தென்மத்திய மும்பை தொகுதியில் 2014ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஏக்நாத் கெய்க்வாட் சிவசேனாவின் ராகுல் ஷெவாலேயிடம் தோற்றுப்போனார். இன்றைக்கு ஏக்நாத் கெய்க்வாட் மகள் வர்ஷா கெய்க்வாட் தனது தந்தையை தேர்தலில் தோற்கடித்த சிவசேனா வேட்பாளர் ராகுல் ஷெவாலேயிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார். சிவசேனா(உத்தவ்) கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.

வடமேற்கு மும்பை தொகுதியில் சிவசேனா (உத்தவ்) சார்பாக அமோல் கீர்த்திகர் போட்டியிடுகிறார். ஆனால் இப்போது அதே தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் அமோல் கீர்த்திகர் தந்தை கஜானன் கீர்த்திகர் மற்றொரு சிவசேனா (ஷிண்டே)வில் இருக்கிறார். இதனால் சொந்த மகனுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்யவேண்டிய நிலையில் கஜானன் கீர்த்திகர் இருக்கிறார். கஜானன் கீர்த்திகரை மகனுக்கு எதிராக களம் இறக்க ஏக்நாத் ஷிண்டே முயன்றார். ஆனால் கஜானன் கீர்த்திகர் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இப்படி எத்தனையோ உறவுகள் தங்களது சொந்த உறவினர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனால் இந்த மக்களவை தேர்தல் மகாராஷ்டிராவில் மகாபாரத யுத்தம் போன்று உறவினர்கள் மோதும் போர்க்களமாக மாறி இருக்கிறது.