புதுடெல்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலை தணிக்க வேண்டும் என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை விரிவாக பார்ப்போம்.
இஸ்ரேல் மீது ஈரான் கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் டரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் அழித்தன. இந்த தாக்குதல் 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என இணையவாசிகள் பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
“இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் நமக்கு பதட்டமான மற்றும் கவலை தரும் வகையிலான வார இறுதியாக அமைந்தது. இதனை ஜெர்மனி அரசு வன்மையாக கண்டிக்கிறது. இதில் எங்களது அணுகுமுறை மிகவும் தெளிவாக உள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதலை தணிக்க வேண்டிய நேரம் இது. இதன் மூலம் பதற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
ஈரான் சிறை பிடித்துள்ள கப்பலில் சிக்கியுள்ள 17 இந்திய மாலுமிகளை மீட்பது தொடர்பாக எங்களது நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈரான் தரப்பில் பேசியுள்ளது” என பிலிப் ஆக்கர்மேன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் அதனை முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் பின்னணி? – இஸ்ரேல் மீது காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி தீவிரவாதிகள் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த ஹவுதி தீவிரவாதிகளுக்கு ஈரான் ராணுவம் ஆதரவு அளித்து வந்தது. இதனால் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஈரான் ராணுவ அதிகாரிகள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் 2 பேர் உட்பட 16 பேர் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கூறியிருந்தது.
இதனால் இஸ்ரேலை தாக்குதலில் இருந்து காக்க அமெரிக்கா தனது போர் கப்பல்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியது. இந்நிலையில் இஸ்ரேல் சரக்கு கப்பல் ஒன்றையும், ஈரான் ராணுவம் கைப்பற்றியது. இதற்கு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இந்த சூழலில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.