மத ரீதியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் அதிக மத மாற்றங்கள் நிகழும்: நாராயணன் திருப்பதி

சென்னை: மத ரீதியிலான இடஒதுக்கீட்டை செயல்படுத்தினால் அதிகளவில் மத மாற்றங்கள் நிகழும் என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “14.3 சதவீதம் உள்ள இஸ்லாமியர்களுக்கு 15 சதவீதம் பங்கு கிடையாதா? உரிமை கிடையாதா? என்று கேட்கிறார் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார். இட ஒதுக்கீடு என்பது இந்தியாவில் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளினால் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மக்களை மேம்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பு. அதாவது, பல்வேறு சாதி வேறுபாடுகள் உள்ள ‘இந்து’ என்ற அமைப்பில் வாழ்ந்து வரும் மக்களுக்காக என்பதே விதி, சட்டம். இதை நாம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலே தான் இடஒதுக்கீடானது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.

யார் ஒருவர் இஸ்லாமியர் இல்லையோ, கிறிஸ்துவர் இல்லையோ, பார்ஸி இல்லையோ அவர் ‘இந்து’ என்கிறது இந்திய அரசியலமைப்பு சட்டம். அதன்படி மத ரீதியாக தங்களை அடையாளம் கொள்வோருக்கு இட ஒதுக்கீடு என்பது பொருந்தாது. ஏனெனில், இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்களில் சாதிகள் இல்லை. அதனால் சமூக ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்றே அந்த மதங்கள் சொல்கின்றன. ஆனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிலிருந்து உள் இடஒதுக்கீடாக மத அடிப்படையில் சில அரசுகள் பிரித்து கொடுத்துள்ளன.

சில மாநிலங்களில் பாதிக்கப்பட்ட சமுதாயத்தினர் நீதிமன்றங்களை அணுகிய போதெல்லாம், மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஏற்க மறுத்து, அவை சட்ட விரோதமானது என்று நீதி மன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு எனில், எதற்காக ஒரு மதத்துக்கு மட்டும் மத ரீதியிலான இட ஒதுக்கீடு? அப்படி மத ரீதியாக வழங்கப்பட்டால் அது அடிப்படை இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே தகர்ப்பதாகாதா? ஒரு வேளை, இஸ்லாமியர்களுக்கு மட்டும் மத ரீதியாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால், கிறிஸ்தவ, சமண மதத்தினருக்கும் அதே அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்காதா?

அந்நிலையில், தற்போதைய இட ஒதுக்கீட்டின் அடிப்படை தன்மையை மாற்றி, இந்துக்களின் மக்கள் தொகைக்கேற்பவே மத அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெற்று சட்ட சிக்கல்களை உண்டாக்காதா? அது ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் தன்மையை பாதித்து விடாதா? மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால், மத மாற்றங்கள் அதிக அளவில் நிகழ வாய்ப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக மதங்களுக்கிடையே கடும் வேற்றுமைகளும், பதட்டங்களும் ஏற்படும்”, என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.