மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் மாணவிகளுக்கு அடிக்கடி நல்ல தொடுதல், மோசமான தொடுதல் தொடர்பாக கவுன்சிலிங் நடப்பது வழக்கம். அது போன்ற கவுன்சிலிங்கில் மாணவிகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து தெரிவிப்பது வழக்கம். புனேயில் 13 வயது மாணவிக்கு அது போன்ற சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் சொந்த தந்தையே 13 வயது மைனர் பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். அவர் மட்டுமல்லாது அப்பெண்ணின் சித்தப்பாவும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் மைனர் பெண்ணை அவரது சித்தப்பா பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது எதிர்ப்பு தெரிவித்து கத்த முயன்றபோது வாயை பொத்தி, அடித்து உதைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்பெண்ணை அவரது சித்தப்பா மகனும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வெளியில் சொன்னால் கடும் விளைவு ஏற்படும் என்று மிரட்டியுள்ளார். பள்ளி கவுன்சிலிங்கில் இது குறித்த தகவல்களை அப்பெண் பகிர்ந்து கொண்டார். அப்பெண்ணின் தந்தை அடிக்கடி தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

உடனே இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் மூன்று பேரையும் கைது செய்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகமான பெண்கள் உறவினர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் போது அதனை வெளியில் சொல்லாமல் இருந்து விடுகின்றனர்.