இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களின் பாதுகாப்பில் ஷேக் ஹசீனா தப்பி வந்தது எப்படி?

புதுடெல்லி: இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களின் பாதுகாப்பில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு முப்படைகளின் தளபதிகள், காவல் துறை தலைவர் பங்கேற்ற உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ராணுவத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க ஷேக் ஹசீனாவிடம் அறிவுறுத்தப்பட்டது.

இதை அவர் ஏற்கவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவதளபதிகளுக்கும் காவல் துறைதலைவருக்கும் அவர் உத்தரவிட்டார். ஆனால் அவர்கள், மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

அப்போது ஹசீனாவின் தங்கைரெகானா, ஆட்சியை ராணுவத்திடம் ஒப்படைக்க அறிவுறுத்தினார். அமெரிக்காவில் வசிக்கும் ஹசீனாவின் மகன் ஷாஜிப் வாஸத் ஜாய், டெல்லியில் வசிக்கும்மகள் சைமா வாஸத் ஆகியோர் தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வங்கதேசத்தை விட்டு வெளியேறுமாறு வேண்டினார்.

மகன், மகள், தங்கையின் பாசத்துக்கு கட்டுப்பட்ட ஹசீனா, தனது இல்லத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் கிளம்பினார். பின்னர் வங்கதேச விமானப் படையின் சி-130 ரக சரக்கு விமானத்துக்கு மாறிய அவர் இந்தியா நோக்கி புறப்பட்டார்.

அந்த விமானத்தில் ஹசீனாவுடன் அவரது தங்கை ரெகானாவும் இருந்தார். விமானிகள் உட்படவங்கதேச ராணுவத்தை சேர்ந்த7 மூத்த தளபதிகளும் இருந்தனர். ஹசீனாவின் விமானம் மேற்குவங்கம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது.

ஹசீனாவின் வருகை குறித்து இந்தியாவுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. தாழ்வாக பறந்த அவரது விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் மேற்குவங்கத்தின் ஹசிமரா விமானப்படைத் தளத்தில் இருந்துசீறிப் பாய்ந்த 2 ரஃபேல் போர் விமானங்கள் பாதுகாப்பு அரணாக உடன் சென்றன. இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி,ராணுவ தளபதி உபேந்திர திவேதி ஆகியோர் வங்கதேச விமானத்தின் பாதையை தரைக் கட்டுப்பாடு மையங்களில் இருந்து உன்னிப்பாகக் கண்காணித்தனர்.

கடந்த திங்கள்கிழமை மாலை5.45 மணிக்கு டெல்லி அருகேயுள்ள ஹிண்டன் விமானப் படைத்தளத்தில் வங்கதேச விமானம் தரையிறங்கியது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,ஹசீனாவை நேரில் சந்தித்து நிலைமையை கேட்டறிந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.