பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபியில், அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க வாழ்வா சாவா போட்டியில் ஆப்கானிஸ்தானும், இங்கிலாந்தும் களமிறங்கின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். ஆனால், இங்கிலாந்து பவுலர் ஆர்ச்சர், ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். ரகுமானுல்லாஹ் குர்பாஸ், செதிகுல்லா அடல், ரஹமத் ஷா ஆகியோரை ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினர் ஆர்ச்சர்.

ஆப்கானிஸ்தான் அணி ஒன்பது ஓவர்களில் 40 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறிய நேரத்தில்தான் ஓப்பனர் இப்ராஹிம் சத்ரானுடன் கைகோர்த்தார் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி. நிதானமாக ஆடிய இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்தபோது சிறிது நேரத்தில், 140-வது ரன்னில் அடில் ரஷீத் அந்த பார்ட்னர்ஷிப்பை பிரேக் செய்தார். கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால், மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஓப்பனர் இப்ராஹிம் சத்ரான் சதமடித்தார். அவரோடு 5-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த அஸ்மத்துல்லா ஓமர்சாய் அதிரடி காட்டி 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், இப்ராஹிம் சத்ரானை இங்கிலாந்து பவுலர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. எப்படி பந்துபோட்டாலும் பவுண்டரியும், சிக்சருமாக விளாசிய இப்ராஹிம் சத்ரா 150 ரன்களைக் கடந்தார். மறுமுனையில், முகமது நபியும் தனது பங்குக்கு அதிரடி காட்டினார்.

கடைசி ஓவர் வரை களத்தில் நின்ற இப்ராஹிம் சத்ரான், 50-வது ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி லைனுக்கு அருகில் 177 ரன்னில் கேட்ச் அவுட்டானர். இதன் மூலம், சாம்பியன்ஸ் டிராபியில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார் இப்ராஹிம் சத்ரான். அவரைத்தொடர்ந்து, 40 ரன்களில் நபியும் அவுட்டாக, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. ஒருவேளை இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால், அடுத்து ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். ஏற்கெனவே, கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.