புதுடெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனையில் நாட்டிலேயே உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிப்பதாக அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உ.பி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் யோகி பேசியது: “உத்தரப் பிரதேசம் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டவை யுபிஐ மூலம் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்திருப்பது, டிஜிட்டல் வங்கியின் எளிமையைப் பிரதிபலிக்கிறது.
கடந்த 2017-18-ஆம் ஆண்டு, இம்மாநிலத்தில் ரூ.122.84 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக தெரிகிறது. அதன் பிறகு, இது, 2024-25-ஆம் ஆண்டில் (டிசம்பர் 2024 வரை) ரூ.1,024.41 கோடியாக உயர்ந்துள்ளது. இணையம் மற்றும் வைஃபை வசதிகள் கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. விரிவான நிதி விழிப்புணர்வு திட்டம் உபி முழுவதிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வங்கி சேவைகளில் இப்போது 20,416 வங்கிகள், 4,932,000 வங்கி மித்ராக்கள், 18,747 ஏடிஎம்கள் மற்றும் 4.4 லட்சம் வங்கி மையங்கள் அணுகும் வகையில் உள்ளன. இவை, ஒவ்வொரு மட்டத்திலும் நிதி உள்ளடக்கத்தை உறுதி செய்கின்றன. பயனாளிகளுக்கு நேரடிப் பணப் பறிமாற்றத்தினால் ஊழலைக் கட்டுப்படுத்தும் பலன் ஏற்பட்டுள்ளது. இந்த பணப்பறிமாற்றம் என்பது, ‘பஜ்ரங் பலியின் கதாயுதம்’ போல் செயல்படுகிறது.
இது நேர்மையின்மை மற்றும் ஊழலுக்கு எதிராக ஒரு தீர்க்கமான முடிவை அளிக்கிறது. தற்போது, 11 துறைகளில் (113 மத்திய மற்றும் 94 மாநிலத் துறைத் திட்டங்கள் உட்பட) 207 திட்டங்கள் நேரடி பணப்பரிவர்த்தனை-யின் கீழ் செயல்படுகின்றன. ஒரு வருடத்தில், மாநிலத்தில் 9.08 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு நேரடிப் பணப்பரிவர்த்தனைகள் மூலம் ரூ.1,11,637 கோடி தொகையைப் பெற்றுள்ளனர்.
இதன்மூலம் மாநிலத்திற்கு ரூ.10,000 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் அந்நிய நேரடி முதலீட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. ஏப்ரல் 2000 முதல் ஜூன் 2017 வரை, ரூ.3,303 கோடி அந்நிய நேரடி முதலீட்டை நம் மாநிலம் ஈர்த்தது.
அந்நிய முதலீடு 14,000 கோடி: இருப்பினும், 2017 முதல் 2024 வரை, அந்நிய நேரடி முதலீட்டின் வரவு ரூ.14,008 கோடியாக உயர்ந்துள்ளது. இது உத்தரப் பிரதேசம் சரியான திசையில் முன்னேறி வருவதையும், முக்கிய முதலீட்டு இலக்காக அதன் நிலையை வலுப்படுத்துவதையும் நிரூபிக்கிறது.
வங்கி வைப்புத் தொகை உயர்வு: வங்கி அமைப்பு பொருளாதாரத்தின் முதுகெலும்பு. உத்தரப் பிரதேசத்தில் வங்கி வைப்புத்தொகையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. 2016-17 ஆம் ஆண்டில், மாநிலம் முழுவதும் உள்ள வங்கிகளில் வைப்புத்தொகை ரூ.12.75 லட்சம் கோடி ஆகும்.
கடன் வைப்பு விகிதம் உயர்வு: இது, தற்போது ரூ.29.66 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கூடுதலாக, 2016-17 ஆம் ஆண்டில் 44-45 சதவிகிதமாக இருந்த கடன்-வைப்பு விகிதம், தற்போது 61 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டம்: வேலையில்லாத் திண்டாட்டம் சமாஜ்வாதி கட்சி அரசாங்கத்தின்போது, 17 முதல் 19 சதவிகிதம் வரை இருந்தது. எனினும், கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளில், இது படிப்படியாகக் குறைந்து, 2023-24 ஆம் ஆண்டில் 3.4 சதவிகிதத்தை எட்டியுள்ளது.
இதர மாநிலங்களின் ஒப்பீடு: வேலையில்லாத் திண்டாட்டத்தை இதர சில மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், ஜம்மு & காஷ்மீரில் 6.7, கேரளாவில் 7, பஞ்சாபில் 6.1 மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் 4.3 சதவிகிதமாக உள்ளது.
சமாஜ்வாதி அரசின் திறமையின்மை: முந்தைய சமாஜ்வாதி அரசு, வேலையில்லாத் திண்டாட்டத்தின் உதவித்தொகையாக ரூ.20 கோடியை விநியோகித்தது. இதற்காக ஏற்பாடு செய்த நிகழ்விற்காக ரூ.15 கோடி செலவிடப்பட்டது. இது கடந்த கால கொள்கைகளின் திறமையின்மையை எடுத்துக்காட்டுகிறது” என்று அவர் தெரிவித்தார்.