இந்தியா – நியூசிலாந்து விளையாடப்போகும் பிட்ச் அதுதான்…. அப்போ வெற்றி கன்பார்ம்

India vs New Zealand Pitch Report : ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி, மற்றொரு பலம் வாய்ந்த அணியான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்போட்டி குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. நாளை துபாய் மைதானத்தில் நடக்க இருக்கும் இறுதிப் போட்டிக்கு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடியபோது பயன்படுத்தப்பட்ட பிட்ச் உபயோகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணி மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால் இந்த பிட்சில் தான் பாகிஸ்தான் அணியை இந்திய அணி தோற்கடித்திருந்தது.

அதனால், அந்த பிட்சில் இந்திய அணி நம்பிக்கையுடன் களமாடும். ஏற்கனவே இந்த பிட்சில் விளையாடி இருக்கிற அனுபவம் இருப்பதால் நியூசிலாந்து அணிக்கு இந்தப் போட்டி பெரும் சவாலாக இருக்கப்போகிறது. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு பிரதான வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை நம்பி மட்டுமே பிளேயிங் லெவனை எடுத்திருந்தது. இன்னொரு வேகப்பந்துவீச்சாளராக இந்திய அணியின் ஸ்டார் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணியில் இருந்தார். இவர்கள் இருவரும் தான் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணி அமைத்து சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் தூண்களாக இருக்கின்றனர். 

ஒருவேளை பாகிஸ்தான் அணிக்கு எதிரான பிட்ச் பயன்படுத்தப்பட்டால் இந்த இருவர் கூட்டணியே இந்திய அணியின் பிரதான வேகப்பந்துவீச்சு கூட்டணியாக இருக்கும். பிளேயிங் லெவனிலும் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. கடந்த போட்டிகளில் விளையாடிய இந்திய அணியே எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கும். அதாவது இரண்டு வேகபந்துவீச்சாளர்கள் இடம் உறுதியான நிலையில், சுழற்பந்துவீச்சுக்கு நான்குபேர் அணியில் இருக்கப்போகின்றனர். ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் கூட்டணி சுழல் வரிசையில் வலு சேர்க்கும்.

இதனால் இந்த போட்டியிலும் இந்திய அணி பவுலிங்கில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் டாப் பார்மில் இருக்கின்றனர். சுப்மன் கில், கேஎல் ராகுல் ஆகியோரும் நம்பிக்கை கொடுக்கும் நிலையில், நாளைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா பார்முக்கு திரும்பினால் இந்திய அணியை பேட்டிங்கிலும் சமாளிப்பது கடினமாகிவிடும். எது எப்படியோ சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் பிட்ச் தொடர்பான குட் நியூஸ் கிடைத்திருப்பது ஒரு நல்ல சகுணமாக பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.