புதுடெல்லி: சுயசார்பு கொண்ட அதிகாரம் பெற்ற பெண்களின் பலத்தால் மட்டுமே வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க முடியும் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு, வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான மகளிர் சக்தி என்ற கருப்பொருளில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாநாட்டை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் உரை நிகழ்த்திய முர்மு, “சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நாள் பெண்களின் சாதனைகளை கவுரவிக்கவும், அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாலின சமத்துவத்தை மேம்படுத்த நம்மை அர்ப்பணிக்கவும் இது ஒரு சந்தர்ப்பமாகும். சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் 50-வது ஆண்டு இது. இந்த காலகட்டத்தில், மகளிர் சமூகம் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்த முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக எனது வாழ்க்கைப் பயணத்தைக் கருதுகிறேன்.
ஒடிசாவின் ஒரு எளிய குடும்பத்தில் பின்தங்கிய பகுதியில் பிறந்ததிலிருந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கான எனது பயணம் இந்திய சமூகத்தில் பெண்களுக்கு சம வாய்ப்புகள், சமூக நீதியின் தத்துவமாகும். பெண்களின் வெற்றிக்கான உதாரணங்கள் தொடரும்.
வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க பெண்கள் முன்னேறுவதற்கு அவர்களுக்கு சிறந்த சூழல் அவசியம். அழுத்தம் அல்லது பயம் இல்லாமல் தங்கள் வாழ்க்கையைப் பற்றி தாமாக முடிவுகளை எடுக்கக்கூடிய சூழலை அவர்கள் பெற வேண்டும். அறிவியலாகட்டும், விளையாட்டுத்துறையாகட்டும், அரசியலாகட்டும், சமூக சேவையாகட்டும், அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமைக்கு மதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுப்பதை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், நாட்டின் பணியாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பு வேகமாக அதிகரிக்க வேண்டும். தன்னம்பிக்கை, சுயமரியாதை, சுதந்திரம், அதிகாரம் பெற்ற பெண்களின் வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும்” என்று கூறினார்.