நெல்லை பேராசிரியர் விமலாவுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது!

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் விமலா, சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘என்ட ஆண்கள்’ என்ற மலையாள நூலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது.

ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்கள் மற்றும் இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வோருக்கும் கடந்த 1955-ம் ஆண்டு முதல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியம் சார்ந்த விருதுகளில் இது உயரிய விருதாக பார்க்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு 21 மொழிகளில் இருந்து நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. மலையாள எழுத்தாளர் நளினி ஜமிலா எழுதிய ‘என்ட ஆண்கள்’ என்ற நூலை ‘எனது ஆண்கள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த படைப்பாளர் பேராசிரியர் விமலா சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ளார். ‘எனது ஆண்கள்’ நூல் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விமலா, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியையாக பணியாற்றுகிறார். மிகவும் எளிய பின்னணி கொண்ட விமலா, டெல்லியில் உள்ள ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சி படிப்பை பயின்றார். இதுவரை 4 நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

மொழி பெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது குறித்து விமலா கூறும்போது, “நான் இளங்கலை பட்டப் படிப்பை தொலைதூரக் கல்வியில் படித்ததால், பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் எனக்கு ஆராய்ச்சி படிப்பில் இடம் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில்தான் ஜேஎன்யு பல்கலைக்கழகம் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது. அங்கு ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள 2 மொழிகள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நான் மலையாளத்தை கற்றுக்கொண்டேன். அதன் மூலம் ஏற்பட்ட அனுபவத்தை வைத்து, மொழிபெயர்ப்பு பணியை தொடங்கினேன்.

மொழிபெயர்ப்பு என்பது எனக்கு மிகவும் விருப்பமான பணி. அந்த வகையில் நளினி ஜமீலா எழுதிய ‘என்டே ஆண்கள்’ நூலை தமிழில் மொழி பெயர்த்தேன். தற்போது எனக்கு சாகித்ய அகடமி விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை எனது அம்மாவுக்கும் உறவினர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். அப்பா இல்லாமல் எனது அம்மா, மருத்துவமனையில் வெந்நீர் வழங்கும் வேலை செய்து என்னை வளர்த்தார். ஒரு முறை அம்மாவின் இடுப்பில் வெந்நீரின் வெப்பத்தால் புண் ஏற்பட்டதை பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்,” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.