மேலக்கோட்டையூர்: உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) சென்னை விஜடி இணைந்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடத்தின.
நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலை கண்காட்சியுடன் ஐஎஸ்ஐ சான்றளிக்கப்பட்ட சாலை பாதுகாப்பு தயாரிப்புகளான ஹெல்மெட், ஆட்டோமொடிவ் கண்ணாடி மற்றும் டயர்கள் ஆகியவற்றின் உயிர் காக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.
இந்த கண்காட்சியை தாம்பரம் கமிஷனரேட்டின் தலைமை போக்குவரத்து வார்டன் எஸ்.தாண்டவமூர்த்தி தொடங்கி வைத்தார். கண்காட்சியின் போது, ஹெல்மெட் இல்லாமல் பயணித்தவர்களுக்கு இலவச ஐஎஸ்ஐ சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டன. முன்னணி தொழில் துறை நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டன.
தொடர்ந்து மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக திருப்போரூர் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினர். பின்னர் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
விழாவில் விஐடியின் இணை துணைவேந்தர் தியாகராஜன், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், சென்ஸ் துறையின் முதல்வர் ரவிசங்கர், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென் பிராந்திய அலுவலகத்தின் தெற்கு பிராந்திய ஆய்வகத்தின் தலைவர் மீனாட்சி கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.