தீவிரவாத தொடர்பு குற்றச்சாட்டு: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

புதுடெல்லி: பலுசிஸ்தானில் நடந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தலுக்கு இந்தியாவின் ஆதரவு இருக்கலாம் என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டினை நிராகரித்துள்ள இந்தியா, பயங்கரவாதத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பதை உலகம் அறியும் என்றும் பதிலடியும் கொடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை கூறுகையில், “பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம். உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பதை உலகம் நன்கு அறியும். பாகிஸ்தான், அதன் சொந்த பிரச்சினைகள் மற்றும் தோல்விகளுக்கான பழியை மற்றவர்கள் மீது சுமத்துவதற்கு பதிலாக தன்னையே ஒருமுறை உற்று நோக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஷாஃப்கத் அலி கான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தலில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்களுக்கு ஆப்கானிஸ்தான் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதகாக குற்றம்சாட்டினார். இதுகுறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், “ரயில் கடத்தல் சம்பவத்தின்போது தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் தீவிரவாத குழுக்களின் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைக்கு பலுசிஸ்தான் விடுதலை படை (பிஎல்ஏ) போன்ற அமைப்புகள் தங்கள் நாட்டு பகுதியைப் பயன்படுத்துவதை ஆப்கானிஸ்தான் தடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

எங்களுடைய கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. உண்மைகள் எதுவும் மாறிவிடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. ஆனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இந்த குறிப்பிட்ட ரயில் கடத்தல் சம்பவத்தில் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதைத்தான் நான் சொன்னேன்.

துரதிருஷ்டவசமாக, நமது பிராந்தியத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான மற்றும் பிராந்திய அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் மேற்கொள்ளும் முன்னோடியில்லாத நடவடிக்கைகளை விரும்பாத பல சக்திகள் இங்கு உள்ளன.

பலுசிஸ்தான் பகுதியில் நடந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது நடந்த சமீபத்திய தீவிரவாத தாக்குதலும் வெளிநாட்டில் இருந்து இயங்கும் தலைவர்களால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.” என்று தெரிவித்தார். மேலும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், பிஎல்ஏ-வின் செயல்பாடுகளை இந்திய ஊடகங்கள் புனிதப்படுத்துகின்றன. இது, அதிகாரபூர்வமாக இல்லாத போதிலும், இந்தியாவின் கொள்கையினை வெளிப்படுத்துகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

400 பேருடன் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கடத்திய 33 பலுசிஸ்தான் விடுதலை படை தீவிரவாதிகளை வெற்றிகரமாக சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியதைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளியுறவுத்துறை இவ்வாறு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.