உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற மகா கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி குடும்பத்துக்கு ரூ.13 கோடி வரி செலுத்த கோரி வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிவேணி சங்கமத்தை ஒட்டியுள்ள அரயில் கிராமத்தைச் சேர்ந்தவர் பிண்ட்டு மெஹ்ரா. படகோட்டும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஜனவரி 13-ல் துவங்கி 45 நாட்கள் மகா கும்பமேளா விழா நடைபெற்றது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 23 முதல் பிப்ரவரி 26 வரையில் மகா கும்பமேளாவுக்கு வந்த பக்தர்களை 130 சொந்த படகுகளில் ஏற்றிச் சென்ற வகையில் பிண்ட்டு மெஹ்ரா குடும்பம் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.23 லட்சம் லாபம் பார்த்தது. இதன் மூலம் அவரது குடும்பம் 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்ததாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமையுடன் கூறியிருந்தார்.
பிண்ட்டு குடும்பம் குற்றப்பின்னணி கொண்டது. அவர் எப்படி ரூ.30 கோடி வருவாய் ஈட்டினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், பிண்ட்டு மெஹ்ராவுக்கு வருமான வரி சட்டம் 1961, பிரிவு 4 மற்றும் 68-ன் கீழ் வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதில், 45 நாட்களில் ரூ.30 கோடி வருமானம் ஈட்டியதற்காக, ரூ.12.8 கோடி வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் கஷ்டப்பட்டு ரூ.500-1,000 வருவாய் ஈட்டி வந்த பிண்ட்டு மெஹ்ரா ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆனார். இந்த சந்தோஷத்தில் இடிவிழும் வகையில் தற்போது வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.