ஐபிஎல் 2025 சீசன் கடந்த மாதம் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது உள்ள பத்து அணிகளில் பல இளம் வீரர்கள் கேப்டன்களாக உள்ளனர். சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்குவாட், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அக்சர் படேல், ஆர்சிபி அணிக்கு ரஜத் படிதார், குஜராத் அணிக்கு சுப்மான் கில், பஞ்சாப் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கேப்டன்களாக உள்ளனர். இவர்களில் சிலர் இந்த ஆண்டு முதல் முறையாக கேப்டன்சி பொறுப்பை ஏற்றுள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக தோனி மற்றும் ரோஹித் சர்மா உள்ளனர். அவர்கள் இருவரும் தலா ஐந்து முறை ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளனர். மேலும் இருவரும் இந்திய அணிக்காக பல ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளனர். இருப்பினும் அதிக பணம் கொட்டும் லீக்குகளில் ஒன்றாக இருக்கும் ஐபிஎல்லில் சில தோல்விகரமான கேப்டன்களும் உள்ளனர். சீசன் தொடக்கத்தில் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இடையில் சில வீரர்கள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
கௌதம் கம்பீர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து, இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்தார் கௌதம் கம்பீர். அதனைத் தொடர்ந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஐபிஎல் 2018 சீசனில் டெல்லி அணிக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. இதனால் தானாக முன்வந்து பாதி சீசனில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் கௌதம் கம்பீர். அதன் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் 2018 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த சீசனிலேயே கேகேஆர் அணியை பிளே ஆஃப்க்கு கொண்டு சென்றார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு கேகேஆர் ஐந்தாவது இடத்தை பிடித்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டு தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடங்களில் இருந்தது. இதன் காரணமாக தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு இயான் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு இயான் மோர்கன் தலைமையில் கொல்கத்தா அணி இறுதிப் போட்டி வரை சென்றது. பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் இடம் தோல்வியை சந்தித்தது.
டேவிட் வார்னர்
டேவிட் வர்ரர் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்து பல சாதனைகளை புரிந்துள்ளார். குறிப்பாக 2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக கேப்டன்சி செய்து வந்தாலும் 2021 ஆம் ஆண்டு கேப்டன் பதிவிலிருந்து நீக்கப்பட்டார் டேவிட் வர்ணர். அதன்பிறகு கேன் வில்லியம்சன் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார், பிறகு தேவி வார்னர் பிளேயிங் லெவனில் இருந்தும் நீக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்திற்கு முன்னதாக டேவிட் வார்னரை சன்ரைசஸ் தக்கவைத்துக் கொள்ளவில்லை. பிறகு ஏலத்திலும் அவரை எடுக்கவில்லை.
ரவீந்திர ஜடேஜா
2022 ஆம் ஆண்டு தோனி தனது கேப்டன்சியை ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். 2008 ஆம் ஆண்டிலிருந்து சென்னை அணியின் கேப்டனாக இருந்து வந்த தோனிக்கு பிறகு இரண்டாவது வீரராக ஜடேஜா கேப்டன்சி பொறுப்பை ஏற்றார். ஆனால் அந்த ஆண்டு முழுவதும் சென்னை அணிக்கு எதுவும் சாதகமாக நடக்கவில்லை. 8 போட்டிகளில் கேப்டனாக இருந்த ஜடேஜா 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொடுத்தார். இதனால் சீசன் பாதியிலேயே தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு சிஎஸ்கேவில் இருந்து ஜடேஜா விலக முடிவு எடுத்தார், இருப்பினும் தோனி சமாதானப்படுத்தி ஜடேஜாவை சிஎஸ்கே அணியில் இருக்கச் செய்தார். தற்போது வரை சென்னை அணிக்காக விளையாடி வருகிறார் ஜடேஜா.
ரிக்கி பாண்டிங்
2013 ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். மேலும் சச்சினுக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த சீசன் முழுவதும் பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டிலும் மோசமான பார்மில் இருந்தார் ரிக்கி பாண்டிங். அதன் பிறகு ரோகித் சர்மா மும்பை அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்றார். ரோஹித் மும்பை அணிக்கு தொடர்ச்சியாக கோப்பைகளை வென்று கொடுத்தார். கேப்டன்சி பொறுப்பில் இருந்து வெளியேறினாலும் மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்தார் ரிக்கி பாண்டிங். பிறகு 2016 ஆம் ஆண்டு தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.
மேலும் படிங்க: ஐபிஎல்லில் எம். எஸ். தோனியின் டாப் 5 இன்னிங்ஸ்!