நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 21வது லீக் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஸ் மற்றும் எய்டன் மார்க்ரம் களம் இறங்கினர். இந்த கூட்டணி லக்னோ அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. பொருமையாக ரன்களை சேர்க்க ஆரம்பித்து, போட்டி செல்ல செல்ல வேகத்தை கூட்டினர். 99 ரன்கள் சேர்த்த நிலையில், மார்க்ரம், ஹர்ஷித் ராணா வீசிய பந்தில் போல்ட் ஆனார்.
அவர் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் வந்த நிகோலஸ் பூரான், மார்ஸுடன் கைகோர்த்து அதிரடியாக ரன்களை சேர்த்தார். அரைசதத்தை கடந்த மிட்செல் மார்ஸ் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் பூரான் தொடர்ந்து அரைசதத்தை கடந்து கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு ரன்களை சேர்த்தார். இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்தது. பூரான் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மேலும் படிங்க: பிளமிங்கால் ஒன்றும் csk கோப்பைகளை வெல்லவில்லை.. தோனிதான் காரணம் – ஹேமாங் பாதானி!
இதனைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரரான டி காக் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து சுனில் நரைன் மற்றும் கேப்டன் ரஹானே அணிக்கு ரன்களை சேர்த்தனர். 50 ரன்களுக்கு மேற்பட்ட பார்ட்னர்ஷிப் உருவான நிலையில், சுனில் நரைன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரஹானே அரைசதம் கடந்த நிலையில், 61 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ரமந்தீப் சிங் 1, வெங்கடேஷ் ஐயர் 45, ரகுவன்சி 5, ரசல் 7 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கொல்கத்தா அணியின் பக்கம் போட்டி திரும்பியதாக நினைத்த நிலையில், விக்கெட்கள் மளமளவென சரிந்தன.
இறுதியில் கொல்கத்தா அணி 234 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். இதன் மூலம் லக்னோ அணி இத்தொடரில் 3வது வெற்றியை கைப்பற்றியது. லக்னோ அணி சார்பாக தாக்கூர் மற்றும் ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்களையும் ஆவேஷ் கான், திக்வேஷ், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: ரஜத் படிதாருக்கு தண்டனை விதித்த பிசிசிஐ! ஆர்சிபி கேப்டனுக்கு இந்த நிலைமையா?